Saturday, September 15, 2018

பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு இன்று முதல் தடை

தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சனிக்கிழமை முதல் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 1 -ஆம் தேதி முதல், பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 



அரசின் உத்தரவுப்படி, அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில், பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதற்கு ஜனவரி 1 முதல், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சனிக்கிழமை முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்திக் கொள்ள பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக, தமிழக பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அனைத்துப் பள்ளிகளிலும், பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும். அதற்கு மாற்றாக உள்ள பொருள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 



அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சனிக்கிழமை (செப்.15) முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது. பள்ளி வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பள்ளி வளாகம்' என்ற பெயர் பலகை வைக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News