Thursday, September 20, 2018

மருத்துவப்படிப்பை தொடர்ந்து நீட் தேர்வு அடிப்படையில் பி.எஸ்.சி. நர்சிங் மாணவர் சேர்க்கை

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. நடப்பு ஆண்டு முதல் சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற படிப்புகளுக்கான சேர்க்கையும் நீட் தேர்வு அடிப்படையில் நிரப்பப்பட இருக்கிறது.



தமிழகத்தில் நீட் தேர்வு தேவையில்லை, பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளுக்கு சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. இருப்பினும் தமிழகத்தில் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த சூழலில் அடுத்த பேரிடியாக பி.எஸ்.சி. நர்சிங் படிப்பையும் நீட் தேர்வு வளையத்துக்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு ஒரு கடிதம் வந்திருப்பதாக மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த நடவடிக்கை அடுத்த கல்வி ஆண்டு (2019-20) முதல் நடைமுறைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏழை மற்றும் நடுத்தர மாணவ, மாணவிகள் இந்த பி.எஸ்.சி. நர்சிங் படிப்பை அதிகம் தேர்வு செய்து படிக்கிறார்கள். அதிக வேலைவாய்ப்பு உள்ள படிப்பு என்பதால் ஆண்டுக்கு 2 ஆயிரம் அரசு இடங்கள் ஒதுக்கப்படுகிறது. இந்த படிப்பிலும் நீட் தேர்வு வந்தால் மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதால் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.



எனவே மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தமிழக அரசு எதிர்க்க வேண்டும். எப்போதும் போல் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் பி.எஸ்.சி. நர்சிங் படிப்பிற்கு மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Popular Feed

Recent Story

Featured News