Monday, September 24, 2018

பேஸ்புக்கின் டேட்டிங் சேவை அறிமுகம் - எப்படி செயல்படுகிறது?






உலக அளவில் கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழின் இந்த பிரத்யேக வாராந்திர தொழில்நுட்ப தொடர்.


பேஸ்புக்கின் டேட்டிங் சேவை அறிமுகம் - எப்படி செயல்படுகிறது?

சமூக ஊடகங்களின் முன்னோடியாக விளங்கும் பேஸ்புக் நிறுவனம், கடந்த மே மாதம் நடந்த தனது வருடாந்திர தொழில்நுட்பவியலாளர்கள் கூட்டத்தில் அறிவித்த டேட்டிங் சேவையை முதல் முறையாக கொலம்பியாவில் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தியுள்ளது.

டேட்டிங் செயலிகள் எனப்படும் தங்களுக்கேற்ற இணையை இணையதள செயலிகள் மூலம் கண்டறியும் வசதி உலகின் பல்வேறு நாடுகளிலுள்ள இளைஞர்களிடையே பரவலாக பயன்படுத்தப்படுகிறது. திண்டேர், காபி மீட்ஸ் பாகல், ஹிங்கே போன்ற செயலிகள் அவற்றில் முன்னிலை வகிக்கின்றன.



இந்நிலையில், உலகின் மிகப் பெரிய சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக், ஏற்கனவே அறிவித்திருந்தபடி தனது டேட்டிங் சேவையை முதல் முறையாக சோதனை முயற்சியில் கொலம்பியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. பல்வேறு டேட்டிங் செயல்களில் உள்நுழைவதற்கு பேஸ்புக் கணக்கு வைத்திருப்பது அவசியமான ஒன்றாக இருக்கும் நிலையில், பேஸ்புக் நிறுவனமே டேட்டிங் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது பயன்பாட்டாளர்களிடையே ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த டேட்டிங் செயலி அர்த்தமுள்ள உறவுகளை ஏற்படுத்துவதற்காக பிரத்யேக சிறப்பம்சங்களை கொண்டு தற்போதுள்ள பேஸ்புக் செயலியிலேயே பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதாவது, தற்போது நீங்கள் பயன்படுத்திவரும் சாதாரண பேஸ்புக் செயலியிலேயே இந்த டேட்டிங் வசதி அந்தந்த நாட்டில் செயற்பாட்டிற்கு வரும்போது சேர்க்கப்படுமென்றும், உங்களது பேஸ்புக் கணக்கு விவரங்களை பகிராமலே/ மற்றவர்களுக்கு தெரிவிக்காமலே இந்த வசதியை பயன்படுத்த முடியுமென்று பேஸ்புக் மேலும் தெரிவித்துள்ளது.

சொல்வதை கேட்டு சமைக்கும் மைக்ரோவேவ் - எப்படி செயல்படுகிறது?

உலகின் முன்னணி இணையதள வணிக நிறுவனமான அமேசான் தனது குரல்வழி மெய்நிகர் கருவியான (வாய்ஸ் அசிஸ்டென்ட்) அலெக்சாவின் புதிய பதிப்புகளை அறிமுகம் செய்துள்ளது.

பல்வேறு நிறுவனங்களின் மின்னணு தயாரிப்புகள் முதல் காலணிகள் வரை எண்ணற்ற பொருட்களை உலகின் பெரும்பாலான நாடுகளில் விற்பனை செய்து வரும் அமேசான் நிறுவனம், கடந்த 2014ஆம் ஆப்பிள் நிறுவனத்தின் சிறி, சாம்சங் நிறுவனத்தின் காலக்ஸி, கூகுள் நிறுவனத்தின் வாய்ஸ் அசிஸ்டன்ட்டுக்கு போட்டியாக 'அமேசான் அலெக்சா' என்ற பெயரில் தனது பிரத்யேக குரல்வழி மெய்நிகர் கருவிகளை வெளியிட்டது.



அதாவது, இந்த கருவியை பயன்படுத்தி இணையத்தில் உங்களுக்கு தேவையான விடயத்தை ஆங்கிலம் உள்ளிட்ட சில மொழிகளில் கூறினால் உடனுக்குடன் அதற்கான முடிவுகளை பெற முடியும். உதாரணமாக ஏதாவதொரு திரைப்பட பாடலை கூறி, அதை பாட வை என்று கூறினால் அலெக்சா அதை புரிந்துகொண்டு அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஸ்பீக்கர் மூலம் அந்த பாடலை ஒலிக்கும். இதேபோன்று, நேரம், வானிலை, போக்குவரத்து நெரிசல், செய்திகள், நினைவூட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை இதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

ஒவ்வொரு ஆண்டும் அலெக்சாவின் புதிய பதிப்புகளை வெளியிட்டு வரும் அமேசான், இந்தாண்டும் எக்கோ டாட், எக்கோ சப், எக்கோ ப்ளஸ், எகோ ஷோ, எக்கோ வால் கிளாக், எக்கோ ஆட்டோ, எக்கோ லிங்க், எக்கோ லிங்க் அம்ப் போன்ற அலெக்சா தயாரிப்புகளையும், அலெக்சா இணைக்கப்பட்ட அமேசானின் மைக்ரோவேவ், கார்டு, பயர் டிவி ரீகாஸ்ட் போன்ற புதிய தயாரிப்புகளையும் வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, குரல் மூலம் சமைப்பதை சாத்தியமாக்கும் அமேசான் பேசிக்ஸ் மைக்ரோவேவ் என்ற தயாரிப்பு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. உங்களது ஏதாவதொரு அலெக்சா கருவியை இந்த மைக்ரோவேவுடன் இணைப்பதன் மூலம் அதன் உள்ளே வைக்கப்பட்டுள்ள உணவை எவ்வளவு நேரம், எந்த வகையில் சமைக்க வேண்டும், நிறுத்த வேண்டும் போன்ற பல்வேறு தேவைகளை வாய்மொழியாகவே தெரிவித்து நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

மூன்று கேமராக்கள் கொண்ட சாம்சங்கின் முதல் திறன்பேசி அறிமுகம்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மூன்று பின்பக்க கேமராக்கள் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் முதல் திறன்பேசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ7 என்ற இந்த திறன்பேசியில் தலா 24 மெகாபிக்சல் சென்சார், 5 மெகாபிக்சல் டெப்த் லென்ஸ், 8 மெகாபிக்சல் கொண்ட வைட் ஆங்கெல் லென்ஸ் என மூன்று பின்பக்க கேமராக்கள் உள்ளதே சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

6 அங்குல Full HD+ Super AMOLED திரையும், 3,300 mAh திறனுடைய பேட்டரியும், 6 ஜிபி ராமும், 128 ஜிபி உள்நினைவகமும் கொண்ட இந்த திறன்பேசி சமீபத்திய ஆண்ட்ராய்டு இயங்குதளமான ஓரியோவில் செயல்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த திறன்பேசி வரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருமென்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தவார சிறப்பு தகவல்: உங்களுக்கு நிஜமாகவே திறன்பேசியில் ஆஃப் இன்ஸ்டால் பண்ணத் தெரியுமா?

உலகின் பெரும்பாலோனோரின் தினசரி வாழ்க்கையில் அசைக்க முடியாத இடத்தை திறன்பேசிகள் பெற்றுள்ளது என்பதை அறுதியிட்டு கூற முடியும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உங்களது மூளையில், காகிதத்தில், பெட்டிக்குள் ரகசியமாக அடைக்கப்பட்டிருந்த தகவல்கள் அனைத்தும் தற்போது உள்ளங்கை அளவுள்ள திறன்பேசியில் அடங்கியுள்ளன.

ஆனால், அவற்றிலுள்ள உங்களது தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் எந்நிலையில் இருக்கிறது என்று பலரும் துளிகூட நினைத்துப்பார்ப்பதில்லை. முகத்தை அழகாக்கி காட்டும் செயலிகளையும், புகைப்படங்களில் தொழில்நேர்த்தியை வெளிக்காட்டும் செயலிகளையும், உங்களை தேர்ந்த காணொளி தயாரிப்பாளர் போன்ற பிம்பத்தை உருவாக்கும் செயலிகளையும் இலவசமாக பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்வதற்கு முன்பு அதற்கு ஈடாக நீங்கள் கொடுக்கும் தகவல்களை பற்றி யோசித்ததுண்டா?

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட இயங்கும் திறன்பேசிகளில் செயலிகளை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்வதற்கு முன்னர் கவனிக்க வேண்டிய விடயங்கள் குறித்து விளக்குகிறது பிபிசி தமிழ் தொழில்நுட்ப தொடரின் இந்த வார சிறப்பு பகுதி.

ஆஃப் ஸ்டோரை மட்டும் பயன்படுத்துங்கள்!

கூகுள் நிறுவனத்தின் கைபேசிகளுக்கான பிரத்யேக இயங்குதளமான ஆண்ட்ராய்டைதான் உலகிலுள்ள மொத்த திறன்பேசி பயன்பாட்டாளர்களில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, கோடிக்கணக்கானோர் பயன்படும் இயங்குதளத்திற்கு தேவையான செயலிகளை முன்னணி நிறுவனங்கள் மட்டுமின்றி, முகம் தெரியாத பல்லாயிரக்கணக்கானோர் உருவாக்கி வருகின்றனர்.

அருமையான செயலிகள் பல செயலிகள் நிறைந்துள்ள இந்த இடத்திலேயே எதற்கும் பயன்படாத போலி செயலிகள் குவித்துள்ள நிலையில், ஆஃப் ஸ்டோருக்கு வெளியே இணையதளங்களில் கிடைக்கும் செயலிகளின் நம்பகத்தன்மை குறித்து நினைத்து பாருங்கள்! எனவே, கூகுள் ஆஃப் ஸ்டோர் தவிர்த்து வேறெங்கிருந்தும் செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதை முற்றிலும் தவிருங்கள்.



பிரபலத்தன்மையை பரிசோதியுங்கள்

ஆண்ட்ராய்டு பிலே ஸ்டோரில் உங்களுக்கு வேண்டிய ஆப்பை தேடும்போது, நீங்கள் தட்டச்சிட்ட குறிப்பு வார்த்தை கொண்ட செயலி கிடைக்கிறதா என்பதை மட்டும் பார்க்காமல் அதன் பிரபலத்தன்மை, பயன்பாட்டாளர்கள் ரேட்டிங்கை பாருங்கள்.

நீங்கள் பதிவிறக்கம் செய்யும் செயலிகள் குறைந்தது ஒரு லட்சம் முறையாவது இதுவரை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதா? கிட்டத்தட்ட நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட ரேட்டிங் கொண்டுள்ளதா? என்பதை பார்ப்பதுடன், எத்தனை வாடிக்கையாளர்கள், எவ்விதமான கருத்துக்களை பதிவு செய்துள்ளார்கள் என்றும் பார்க்கலாம்.

உண்மையில் இலவசம்தானா?

நீங்கள் மேற்கூறிய விடயங்களையெல்லாம் கடந்து வந்துட்டால் எல்லாம் முடிந்துவிட்டதென்று நினைத்துவிடாதீர்கள். இதன் பிறகுதான் நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்வதாக நினைக்கும் செயலி உங்களுக்கு தெரியாமலேயே எவ்வளவு தகவலை சுரண்ட உள்ளது என்பது குறித்து தெரிந்துகொள்ள முடியும்.

நீங்கள் பதிவிறக்கம் செய்வதற்கு முடிவுசெய்துள்ள செயலின் பக்கத்திற்கு செல்லுங்கள். அதன் கடைசி வரை திரையை தள்ளிக்கொண்டே சென்றால் டெவலப்பர் (Developer) என்ற பகுதிக்கு கீழே பர்மிசன் டீடைல்ஸ் (Permission Details) என்ற தெரிவு இருக்கும். அதை நீங்கள் கிளிக் செய்தவுடன் அந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்தால் என்னென்ன தகவல்களை எல்லாம் அது பயன்படுத்தும், எடுத்துக்கொள்ளும் என்று சுருக்கமாக குறிப்பிடப்பட்டிருக்கும்.

அந்த நீண்ட பட்டியலிலுள்ள வார்த்தைகள் உங்களது தனியுரிமைக்கும், தரவு பாதுகாப்புக்கும் எவ்வித பிரச்சனையையும் விளைவிக்காது என்று உறுதியாக நம்பினால் மட்டும் அந்த செயலியை இன்ஸ்டால் செய்யுங்கள்.



Popular Feed

Recent Story

Featured News