Monday, September 24, 2018

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அவருடைய இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-




2011, 2014 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் 82 ஆயிரம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி உள்ளனர். இவர்களுக்கு வெயிட்டேஜ் முறை நீக்கப்பட்டுள்ளதால் மீண்டும் ஒரு தேர்வு வைக்கப்பட்டுள்ளது.

அதில் வெற்றிபெறும் ஆசிரியர்களை கொண்டு காலிப்பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்பப்படும். ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ள பள்ளிக்கூடங்களில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் ரூ.7 ஆயிரத்து 500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் நிறைவடைய உள்ளது, ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்களுக்கு அந்த வாய்ப்புகள் வழங்கப்படும்.

9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளை கணினிமயமாக்கவும், 3 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த பணிகள் நிறைவடைந்தவுடன் கணினி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும். 10, 11, 12 ஆகிய வகுப்பில் பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெற 2 மறுதேர்வுகள் நடத்தப்படும். அடுத்த கல்வியாண்டு முதல் ஜூன் மாதம் மட்டுமே மறுதேர்வு நடைபெறுமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.



12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600 மதிப்பெண்கள் என்ற முறையில் தேர்வு எழுதி வெற்றிபெறும் மாணவர்கள் உயர்கல்வி செல்வதில் எந்த சிக்கலும் இருக்காது. சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களில் 500 மதிப்பெண்கள்தான் கணக்கிடப்படுகிறது.

இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள மிகப்பழமையான நூலகத்திற்கு 50 ஆயிரம் நூல்களும், தமிழர் வாழ்கின்ற பகுதிகளில் உள்ள 5 நூலகங்களுக்கு 50 ஆயிரம் நூல்களும், 10 பள்ளிக்கூடங்களுக்கு தலா 500 நூல்களும் என மொத்தம் ஒரு லட்சத்து 5 ஆயிரம் நூல்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



Popular Feed

Recent Story

Featured News