Monday, September 24, 2018

நடுநிலைப் பள்ளி இளம் மாணவர்களின் கேள்விகளுக்கு பொறுமையுடன் புரியும் வகையில் பதில் சொன்ன இஸ்ரோ விஞ்ஞானி

அப்துல்கலாம் வழியில் நானும் பயணிக்கிறேன்!”- மயில்சாமி அண்ணாதுரை அடுத்தது என்ன என்ற என் தந்தையின் கேள்வியே என்னை விஞ்ஞானியாக உருவாக்கியது - மயில்சாமி அண்ணாதுரை



தேவகோட்டை: பஸ், ரயிலில் போவது போல ராக்கெட்டுகளில் ஏறி பக்கத்து ஊர்களுக்குப் போகும் காலம் விரைவில் வரும் என்று பிரபல விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார் .

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விஞ்ஞானியும் முன்னாள் இஸ்ரோ இயக்குநருமான மயில்சாமி அண்ணாதுரை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடினார். நிகழ்வுக்கு வந்தவர்களை மாணவி கீர்த்தியா வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். மயில்சாமி அண்ணாதுரை மாணவர்களிடம் உரை நிகழ்த்தினார்.

பக்கத்து ஊர்களுக்கு ராக்கெட் பயணம்

ராக்கெட் மூலம் விரைவில் நாம் வெளியூர் பயணம் செய்யும் நாள் உருவாகும். அப்போது இங்கு இருந்து பல வெளிநாடுகளுக்கு பல மணி நேரம் பயணம் செய்யும் நேரம் குறைந்து அடுத்த நாட்டுக்கு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்தில் சென்று விடலாம்.

உங்களில் என்னைப் பார்க்கிறேன்



உங்களில் என்னைப் பார்க்கிறேன் நானும் 40 ஆண்டுகளுக்கு முன்பு உங்களில் ஒருவனாக உங்களைப்போல் இதே சூழ்நிலையில்தான் அரசு பள்ளியில் படித்தேன். உங்களில் என்னை நான் இன்று பார்க்கிறேன். என்னுடனான உங்கள் கலந்துரையாடல் உங்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்.

பென்சில் டூ பத்மஸ்ரீ

பென்சில் டூ பத்மஸ்ரீ நான் இரண்டாம் வகுப்பு படித்தபோது இரண்டு ரூபாய் பென்சில் பரிசாக வாங்கியதும், என்னை என் அப்பா கேட்ட கேள்வி அடுத்தது என்ன? என்பதுதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது. பென்சிலில் ஆரம்பித்து பத்மஸ்ரீ பட்டம் பெற்றதற்கு பிறரிடம் நான் கேட்ட கேள்விகளும், பிறர் என்னிடம் கேட்ட கேள்விகளுமே எனது வளர்ச்சிக்கு காரணம்.

கேள்வி கேட்டால்தான் வளர முடியும்

கேள்வி கேட்டால்தான் வளர முடியும் கேள்விகளை கேட்கும்போது அதற்குரிய பதிலாக நீ இருக்க வேண்டும் என்று அப்துல்கலாம் அய்யா எனக்கு சொன்னதை செயல்படுத்தியதால்தான் செயற்கை கோள்களை என்னால் உருவாக்க முடிந்தது. நீங்களும் கேள்விகளை கேட்பதுடன் அதன் பதில்களை அறிந்து உங்கள் வாழ்க்கையில் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.

செயற்கை கோளின் பயன்கள்
செயற்கை கோள் எப்படி செலுத்தப்படுகிறது,செயற்கைகோள் மூலமாக என்னென்ன பயன்கள்,செயல்பாடு பற்றி தெளிவுபடுத்தினார்.விண்வெளி ஆராய்ச்சியின் வழியாக மக்களுக்கு எந்தெந்த வகையில் உதவலாம் என்பதை தெளிவாக விளக்கினார்.எ.டி .எம்.செயல்பாடு,பொருளாதாரம்,புயல் ,காற்றழுத்தம்,காடுகளை பாதுகாத்தல்,எல்லை பாதுகாப்பு இவ்வாறு பல பயன்பாடுகளை பற்றி விளக்கினார்.



செயற்கை கோள் அமைப்பு மற்றும் தயாரிக்க ஆகும் செலவு :

செயற்கைகோள் பொதுவாக 17 நிமிடம் முதல் 20 நிமிடத்திற்குள் அதனுடைய பாதை எதுவோ அதைச் சென்றடைந்து விடும்.செயற்கைகோள் ஒரு கிலோகிராம் முதல் டன் கணக்கில் என எவ்வளவு எடையில் வேண்டுமானாலும் இருக்கலாம்.சுமார் இரண்டு லட்சம் முதல் 1000கோடி வரை செலவாகலாம்.

விண்வெளிக்கு செல்லும் வீரர்களின் உடல்நிலை :

விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் பொதுவாக நல்ல ஆரோக்கியமானவர்கள்தான் பயிற்சி அளிக்கப்பட்டு அனுப்பப்படுவார்கள்.ஒருவேளை விண்வெளிக்கு சென்ற பிறகு உடல்நிலை பாதிப்பு அடைந்தால் அதற்கு மருந்துகள் கேப்ஸுல் வடிவில் எடுத்து செல்வார்கள்.எனவே அதனால் எந்த பாதிப்பும் வராது.

செயற்கைக்கோளை முதன்முதலாக அனுப்பிய நாடு :

செயற்கைக்கோளை முதன்முதலாக அனுப்பிய நாடு ரஷ்யாதான்.பிறகு அமெரிக்கா என இரண்டு நாடுகளும் போட்டி போட்டு கொண்டு அனுப்ப தொடங்கின.



செயற்கை கோள் செயல்பாடு :

செயற்கைக்கோள் பகுதிகள் ஒவ்வொரு இடத்திலும் பிரிந்து செல்ல காரணம் எடை குறையக்குறைய வேகம் அதிகரிக்கும்.எரிபொருள் குறைந்தாலோ,பழுதடைந்தாலோ அதன் செயல்பாடு குறைந்து விடும்.படிப்படியாக ஒவ்வொரு பாகமாக அதன் உந்துதலை அதிகப்படுத்தி நிறைவாக விண்வெளியின் சுற்றுவட்டப்பாதைக்குள் சென்று விடும்.என்றார் மயில்சாமி அண்ணாதுரை. நிறைவாக மாணவர் அய்யப்பன் நன்றி கூறினார்.



Popular Feed

Recent Story

Featured News