இதயநோய் தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், அதிக நேரம் தூங்குவதாலும் இதயநோய் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
ஜெர்மனியின் மூனிச் நகரில் இதயநோய் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு குறித்து மருத்துவ நிபுணர் எபாமேனோண்டஸ் ஃபௌண்டாஸ் கூறுகையில், 10 லட்சம் இளைஞர்களிடம் இது குறித்துத் தகவல் சேகரிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். “குறைவாகத் தூங்குவதால் இதயநோய் வருவது போன்று, தொடர்ந்து அதிகமாகத் தூங்கினாலும் இதயநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 11 ஆய்வுகள் மூலம் இது தெரியவந்துள்ளது. எந்தெந்தக் காரணிகளால் இதயம் பாதிக்கப்படும் என்பதைக் கண்டறிய, இன்னும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய ஆய்வின்படி, குறைவாகத் தூங்குபவர்களுக்கு 11 சதவிகிதம் இதயநோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கும் நிலையில், தொடர்ந்து அதிகமாகத் தூங்குபவர்களுக்கு 33 சதவிகிதம் வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது. அதாவது, மூன்று மடங்கு அதிகமாக இதயநோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.