Tuesday, September 4, 2018

தொடர் ஆராய்ச்சி மேற்கொண்டால் மட்டுமே பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு: அண்ணா பல்கலை. ஆட்சிக் குழு முடிவு

ஆராய்ச்சி மாணவருக்கு வழிகாட்டுதலும், தொடர் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டால் மட்டுமே பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிப்பது என அண்ணா பல்கலைக்கழக ஆட்சிக் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு சில திருத்தங்களுடன் இந்த முடிவு விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது எனவும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.



விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் அண்ணா பல்கலைக்கழகம் அண்மையில் சிக்கியது. இது பல்கலைக்கழகத்தின் புகழுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்தவும், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் அண்ணா பல்கலைக்கழகத்தை மேம்படுத்தவும் கல்வியாளர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா கூறினார்.

அதன் ஒரு பகுதியாக, பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் அனைத்துப் பேராசிரியர்களின் கூட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் துணைவேந்தர் கூட்டினார். அதில், பேராசிரியர்களுக்கு பணி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் (சி.ஏ.எஸ்.) வழங்கப்படும் பதவி உயர்வுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அவர் அறிவித்தார். அதில் பேராசிரியர் அந்தஸ்தில் இருப்பவர், பதவி உயர்வுக்கு விண்ணப்பிக்கும்போது குறைந்தபட்சம் ஒரு பிஎச்.டி. மாணவருக்கு வழிகாட்டி இருக்க வேண்டும். மேலும் தொடர் ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள்-திட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

பதவி உயர்வுக்கு விண்ணப்பிக்கும் இணைப் பேராசிரியர், குறைந்தபட்சம் ஒரு ஆராய்ச்சித் திட்டத்தை (புராஜெக்ட்') மேற்கொண்டிருக்க வேண்டும். இவரும் தொடர் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
உதவிப் பேராசிரியர் நிலையில் இருப்பவர்கள் முதல் பதவி உயர்வுக்கு விண்ணப்பிக்கும்போது இரண்டு ஒரு வார பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று சான்றிதழ்களைப் பெற்றிருக்க வேண்டும்.



 இரண்டாவது பதவி உயர்வுக்கு விண்ணப்பிக்கும்போது வாரப் பயிற்சி வகுப்பு ஒன்றை முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்தார். இது பேராசிரியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், துணைவேந்தர் அறிவித்த இந்த நிபந்தனைகள் அனைத்தும் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்சிக் குழு கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விவாதத்துக்குப் பின்னர், இந்த நிபந்தனைகளை சிறு திருத்தங்களுடன் முழுமையாக அமல்படுத்துவது என ஆட்சிக் குழு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஆட்சிக் குழுவில் பங்கேற்ற பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் கூறியது:

கல்லூரிக்கும், பல்கலைக்கழகத்துக்கும் வித்தியாசம் உள்ளது. கல்லூரியில் பேராசிரியருக்கு குறிப்பிட்ட ஆண்டுகள் பணி அனுபவம் வந்ததும் பதவி உயர்வு அளிக்கப்பட்டுவிடும். ஆனால், பல்கலைக்கழகத்தைப் பொருத்தவரை ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதுதான் முதல் பணி. எனவே, பேராசிரியர்கள் குறைந்தபட்சம் ஒரு மாணவருக்கு ஆராய்ச்சிக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். அவர்களும் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் பதவி உயர்வு அளிப்பது என ஆட்சிக் குழு முடிவு எடுத்துள்ளது என்றார் அவர்.



Popular Feed

Recent Story

Featured News