Monday, September 24, 2018

மாதம் ஒரு பள்ளியில் நூலகம் திறக்கும் முயற்சியில் கல்லூரி மாணவர்




பழைய செய்தித்தாள்களைச் சேகரித்து அதை விற்று, அதில் கிடைக்கும் வருவாயில் மாதம் ஒரு பள்ளியில் நூலகம் திறக்க முயற்சி செய்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளார் பொறியியல் கல்லூரி மாணவர் கீர்த்திவாசன்.

திருச்சியைச் சேர்ந்தவர் கீர்த்திவாசன். இவர், சென்னையில் உள்ள வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வருகிறார். இவர், திருச்சியில் உள்ள தனது வீட்டுப் பகுதிகளில் பலரது வீடுகளில் பழைய செய்தித்தாள்களை வாங்கி அவற்றை பென்சில் செய்யும் தொழிற்சாலைக்கு அனுப்பி வருகிறார். 

அவற்றில் இருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டு மாதந்தோறும் ஒரு அரசுப் பள்ளியில் நூலகம் திறக்க முயற்சி செய்து வருகிறார். ஏற்கெனவே காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், சிலாவட்டம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூலகத்தைத் திறந்து வைத்துள்ள கீர்த்திவாசன், அடுத்த 3 ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் நூலகத்தைத் திறக்க உள்ளதாகத் தெரிவித்தார்.



இந்த நூலகங்களுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் எழுதிய நூல்கள், பாடநூல்களைத் தவிர்த்து குழந்தைகளுக்குத் தேவையான அறிவு சார்ந்த புத்தகங்கள், அறிவியல், வரலாற்று புத்தகங்கள் என பல்வேறு வகை நூல்களை கீர்த்திவாசன் வாங்கித் தருகிறார்.

ஒரு நூலகத்துக்கு ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான நூல்களை அளித்து நூலகத்தைத் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து பள்ளி நிர்வாகிகள் அந்த நூலகத்தை நடத்துவோர் மேலும் புரவலர்களைச் சேர்ப்பார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.



Popular Feed

Recent Story

Featured News