Wednesday, September 26, 2018

இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளிலும் எல்.கே.ஜி. முதல் இரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.



தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) பாடத்திட்ட விதிகளை மீறி, சிபிஎஸ்இ பள்ளிகள் ஒன்று முதல் 3 -ஆம் வகுப்பு வரை 8 பாடங்களைப் போதிக்கின்றன. சிறு குழந்தைகளுக்கும் வீட்டுப் பாடம், அசைன்மென்ட் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. தனியாரிடம் இருந்து புத்தகங்களை வாங்க வேண்டும் என்பதற்காக இந்தப் பாடங்களை தனியார் பள்ளிகள் குழந்தைகள் மீது திணிக்கின்றன.

குழந்தைகள் தங்களது எடையைக் காட்டிலும் கூடுதல் எடையை புத்தக சுமையாக சுமந்து செல்கின்றனர். இதனால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே சிபிஎஸ்இ பள்ளிகள் என்சிஇஆர்டி பாடத் திட்டத்தை மட்டுமே பின்பற்ற வேண்டுமென உத்தரவிட வேண்டும் என வழக்குரைஞர் எம்.புருஷோத்தமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் பள்ளிகளில் 2 -ஆம் வகுப்பு வரை கண்டிப்பாக வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்தாவிட்டால் அனைத்து மாநில பள்ளிக் கல்வித் துறை செயலாளர்களும் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என அறிவுறுத்தியிருந்தார்.



இந்த நிலையில், இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும்
எல்.கே.ஜி. முதல் இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
அதேபோன்று தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாட நூல்களின் மூலம் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட வேண்டும்.

இதுதொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் கூட்டங்கள் நடத்தப்பட்டு உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்த வேண்டும். மேலும் இந்த உத்தரவுகள் பள்ளிகளில் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என அதில் கூறியுள்ளார்.



Popular Feed

Recent Story

Featured News