Monday, September 10, 2018

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி: அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு





அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்க ஆசைப்படுகிறேன், இதனை முதல்வரிடம் தெரிவித்துள்ளேன்.
அவர் மனது வைத்தால், ஆசிரியர்களுக்கு விரைவில் கிடைக்கும் என்றார் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்.

தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், 2,833 ஆசிரியர்களுக்கு, சிறந்த ஆசிரியர்களுக்கான விருதுகளை வழங்கி அவர் மேலும் பேசியது:

மிகச் சிறந்த கல்வியாளர்கள் அரசுப் பள்ளிகளில் மட்டும்தான் உள்ளனர். பின்தங்கிய பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய குழந்தைகளை சிறந்த மாணவர்களாக உருவாக்கும் பணியை அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான் மேற்கொண்டு வ ருகின்றனர். கல்வியின் அடித்தளமாக ஆசிரியர்கள் விளங்குகிறார்கள்.



தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 3 லட்சம் குழந்தைகளைச் சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, தற்போது வரை ஒரு லட்சம் குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்களின் பணிச் சுமையை சரிசெய்யும் வகையில், 3,862 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 4,013 ஆய்வக உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 13 ஆயிரம் பேர் கலந்தாய்வின் மூலம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நிர்வாக வசதியை மேம்படுத்தும் வகையில் 67 கல்வி மாவட்டங்கள் 120 கல்வி மாவட்டங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம். எந்தக் கவலையும் தேவையில்லை. உங்களின் கோரிக்கைகளை எங்களுக்குச் சுட்டிக்காட்டுங்கள், நிறைவேற்றத் தயாராக இருக்கிறோம்.

தொலைநோக்குச் சிந்தனையின் அடிப்படையில்தான் பாடத் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. யாராலும் செய்ய முடியாத சாதனை அது. வெறும் 8 மாதங்களில் மிகச்சிறந்த பாடத் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. குறைந்தது இரண்டு ஆண்டுகள் பிடிக்கும். இதை மத்திய அமைச்சரே என்னிடம் சொன்னார். 1200 ஆசிரியர்கள் இந்த பணியில் பங்காற்றியிருக்கிறார்கள்.

அடுத்த மாதத்துக்குள் 9,10,11,12 ஆகிய வகுப்புகள் முழுமையாக கணினிமயப்படுத்தப்படும். அவை இணையதளத்துடன் இணைக்கப்படும். இந்த நிலையில், ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுமா என்ற உங்களின் ஏக்கத்தை முதல்வரிடம் தெரிவித்துள்ளேன். அவர் மனது வைத்தால் மிக விரைவில் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்ற எனது ஆசையைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் செங்கோட்டையன்.



விழாவில், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பேசியது: ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் கருவறைக்குப் பிறகு நல்ல ஆசிரியரைக் கொண்ட வகுப்பறைதான் மிக முக்கியப் பங்காற்றுகிறது. பல அறிஞர்களும், தத்துவஞானிகளும் ஆசிரியர்களாக இருந்துதான் சமூகத்துக்கு வழிகாட்டினார்கள். அவற்றை கடைப்பிடிப்பதுதான் நாம் ஆசிரியர்களுக்குச் செய்யும் மரியாதை.

ஒரு நாட்டின் கல்வி வளர்ச்சிதான் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமைகிறது. தமிழ்நாட்டில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பணிகளால் கல்வி அறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 80.23 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்றார் அன்பழகன்.



Popular Feed

Recent Story

Featured News