Wednesday, September 26, 2018

குடி தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண புதிய தொழில்நுட்பம்:

உலகம் முழுவதும் ஏற்பட்டு வரும் குடி தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் ஜப்பான் நாட்டின் டோஷிபா நிறுவனம் புதிய தொழில்நுட்பம் ஒன்றை கண்டுபிடித்துள்ளது.



உலகம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் முக்கியமான பிரச்சினைகளில் தண்ணீர் பற்றாக்குறையும் ஒன்று. நாம் உயிர் வாழ்வதற்கு நீர் இன்றியமையாதது என்ற உண்மை எல்லோரும் அறிந்ததே. அத்தகைய நீரானது சுத்தமானதாக, பயன்படுத்துவதற்கு ஏற்றதாக உலகின் பல இடங்களில் இன்றைக்கு இல்லை என்பதே உண்மை.

நாம் வாழும் இந்த பூமியானது 70 சதவீதம் நீர்பரப்பினைக் கொண்டுள்ளது. ஆனால், இந்நீர்ப்பரப்பில் நம்மால் பயன்படுத்தக்கூடிய நன்நீரானது 3 சதவீதம் மட்டுமே ஆகும்.நன்நீரில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் பனிக்கட்டியாகவும், பனியாறாகவும் உள்ளது. மீதமுள்ள ஒரு சதவீத நன்நீர் மட்டுமே நம்மால் பயன்படுத்தப்படுகிறது.

தற்போதைய கணக்கெடுப்பின்படி உலகில் 110 கோடி மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதியுறுகின்றனர். உலகில் சுமார் 240 கோடி மக்கள் ஓர் ஆண்டில் குறைந்தது ஒரு மாத கால அளவு தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றனர்.



அசுத்தமான நீரினால் உலகில் 240 கோடி மக்கள் காலரா, டைபாய்டு போன்ற நீர்தொற்று வியாதிகளால் பாதிக்கப்படுகின்றனர். அசுத்தமான நீரினைப் பயன்படுத்தி 20 லட்சம் குழந்தைகள் ஆண்டுதோறும் இறக்கின்றனர் என உலக காட்டுயிர்கள் பாதுகாப்பு அமைப்பானது தெரிவித்துள்ளது.

2025-ஆம் ஆண்டில் உலக மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தண்ணீர் பற்றாக்குறையினால் கடுமையாக பாதிக்கப்படுவர். இப்பாதிப்பு சுற்றுசூழலில் பெரும் தாக்கத்தினை உண்டாக்கி உயிர்சூழலில் கடுமையான விளைவுகளை உண்டாக்கும் என்று அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

உலகில் வாழும் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் போதிய குடியின்றி, தண்ணீர் பற்றாக்குறையால் அவதி படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

இந்த நிலையில், உலக அளவில் நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில், ஜப்பான் நாட்டின் டோஷிபா நிறுவனம் புதிய தொழில்நுட்பம் ஒன்றை கண்டுபிடித்துள்ளது.



இந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் நிலத்தடி நீரின் அளவை அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனால், குடி தண்ணீர் பற்றாக்குறை தீரும் என்று அந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான விவரங்களை அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை.

Popular Feed

Recent Story

Featured News