Saturday, September 8, 2018

SC/ST-வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: மத்திய அரசுக்கு உத்தரவு!





வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: மத்திய அரசுக்கு உத்தரவு!
எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டத் திருத்தம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், தலித் மற்றும் பழங்குடியின மக்களின் பாதுகாப்புக்காக 1989ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டம் எல்லா வழக்குகளிலும் முறையாகப் பயன்படுத்துவதில்லை என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம் எஸ்சி/எஸ்டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில் முகாந்திரம் இல்லையென்றால் முன்ஜாமீன் வழங்குவதில் எவ்விதத் தடையும் இல்லை என்று கடந்த மார்ச் 20ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.



உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தைப் பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்கான சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத் திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர் சாதி சமூகத்தைச் சேர்ந்த சில அமைப்புகள், நாடு முழுவதும் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று முன்தினம் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் மத்திய அரசு அமல்படுத்திய புதிய திருத்தங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசின் நடவடிக்கையால் குற்றம் செய்யாதவர்கள் முன் ஜாமீன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டிருந்தது. .

இந்த மனு நேற்று (செப்டம்பர் 7) நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுக்கள் தொடர்பாக மத்திய அரசு 6 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சுமித்ரா மகாஜன் அறிவுரை

ஒருவருக்குக் கொடுக்கப்பட்ட எதையேனும் உடனடியாக யாராவது திரும்பப் பெற முயற்சித்தால், பெரும் பிரச்சினை உருவாகும் என்று எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் குறித்து மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கருத்து தெரிவித்துள்ளார்.



அதாவது, என் மகனிடம் ஒரு சாக்லேட்டை கொடுக்கிறேன். பின்னர் அது நல்லதல்ல என்று திரும்பப் பெறுகிறேன். இதனால் கோபப்பட்டு அவன் அழ ஆரம்பித்துவிடுவான். ஆனால் சிலரால் அவனிடம் பேசி புரிய வைக்க முயற்சித்து அதனை வாங்கிவிட முடியும் என்று சுட்டிக்காட்டினார் சுமித்ரா மகாஜன். எனவே எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான பிரச்னையை அரசியலாக்காமல் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து பேச முன் வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News