Tuesday, October 9, 2018

சி.பி.எஸ்.இ., 10, 12ம் வகுப்பு தேர்வு அதிரடி மாற்றம் - இந்த ஆண்டு அமல்

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, முன்கூட்டியே தேர்வு நடத்துதல் உள்ளிட்ட மாற்றங்கள், இந்த ஆண்டு அமலுக்கு வருகின்றன.மத்திய இடைநிலை கல்வி பாடத்திட்டமான, சி.பி.எஸ்.இ., முறையை பின்பற்றும் பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, முன்கூட்டியே தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.



அதாவது, தொழிற்கல்வி பாடங்களுக்கு, ஏப்ரலுக்கு பதில், பிப்ரவரியில் தேர்வு நடத்தப்படுகிறது. மற்ற முக்கிய பாடங்களுக்கு, மார்ச்சில் நடத்தப்பட உள்ளன. தேர்வு முடிவுகள், மே மாதம் வெளியிடப்படும்.பிளஸ் 2 துணை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு மதிப்பெண் வழங்க தாமதமாகும் போது, அவர்களால், அதே கல்வி ஆண்டில், கல்லுாரிகளில் சேர முடிவதில்லை. எனவே, டில்லி உயர் நீதிமன்ற உத்தரவின்படி, முன்கூட்டியே தேர்வுகள் நடத்தும் வகையில், புதிய மாற்றத்தை அமல்படுத்த, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.



அதேபோல, பிளஸ் 2வில், ஆங்கில வினாத்தாளில் மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. இதுவரை, 40 கேள்விகள் இடம் பெற்ற நிலையில், ஐந்து கேள்விகள் குறைக்கப்பட்டு, இனி, 35 கேள்விகள் மட்டுமே இடம்பெறும். இதற்கான மாதிரி வினாத்தாள் பட்டியலை, cbseacademic.nic.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இதற்கிடையில், 10ம் வகுப்புக்கு, 'தியரி' என்ற கருத்தியல் மற்றும் செய்முறை தேர்வில், தனித்தனியே, 33 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என்ற விதி, நடைமுறையில் இருந்தது. கடந்த, 2017ல், 10ம் வகுப்புக்கு, பொது தேர்வு அறிமுகமானதால், இந்த விதி தளர்த்தப்பட்டு, இரண்டிலும் சேர்த்து, 33 சதவீதம் மதிப்பெண் எடுக்கலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த ஆண்டும், இந்த சலுகை தொடருமா என, சி.பி.எஸ்.இ., தரப்பில், அதிகாரபூர்வ தகவல் இல்லாததால், மாணவர்கள் இடையே, குழப்பம் ஏற்பட்டுள்ளது.



Popular Feed

Recent Story

Featured News