Sunday, October 7, 2018

18 வயது நிரம்பிய மாணவர்களை  வாக்காளர்களாக பதிவு செய்ய கல்லூரி தூதுவர்களுக்கு வலியுறுத்தல்

கல்லூரிகளில் 18 வயது நிரம்பிய மாணவ, மாணவிகள் அனை வரையும் வாக்காளர்களாக பெயர் சேர்த்திட கல்லூரி தூதுவர்கள் ஆர்வமுடன்
செயல்பட வேண்டும் என்று சேலம் ஆட்சியர் ரோஹிணி வலியுறுத்தி உள்ளார்.






சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்ப்பு விழிப் புணர்வு ஏற்படுத்துவதற்கு தேர்ந் தெடுக்கப்பட்ட மாணவர்கள் கல்லூரி தூதுவர்களாக மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சேலம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான ரோஹிணி தலைமை வகித்தார். கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) வந்தனா கார்க், உதவி தேர்தல் அலுவலர்கள், கல்லூரி தூதுவர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஆட்சியர் ரோஹிணி பேசியதாவது:

உலக அளவில் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. வளர்ச்சி பெற்ற, மிகப்பெரிய நாடுகளாக திகழ்ந்து வருகின்ற அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட மக்கள் தங்களது வாக்குரிமையை செலுத்துவதற்கு சில தகுதிகளை நிர்ணயித்து இருந்தன. ஆனால் நம் இந்தியாவில் மட்டும் தான் ஜனநாயக கடமையை செலுத்துவதற்கு வாக்குரிமை என்ற மிகப்பெரிய ஜனநாயக உரிமையை பெறுவதற்கு 18 வயது நிரம்பிய அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.



இந்தியாவில் நடைபெற்ற முதல் தேர்தலிலேயே 18 வயது நிரம்பிய ஆண், பெண் அனை வருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. அன்று முதல் இன்று வரை 18 வயது நிரம்பிய அனைவரும் தங்களை வாக்காளர்களாக இணைத்துக் கொண்டு தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்று வருகின்றனர்.

அத்தகைய வாக்குரிமையை பெறுவதற்கு 18 வயது நிரம்பிய ஆண், பெண் அனைவரும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் கட்டாயம் இணைத்துக் கொள்ள வேண்டும். வரும் 7 மற்றும் 14-ம் தேதிகளில் சேலம் மாவட்டத்தின் அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெறள்ளது.
இது வரையில் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்காதவர்கள் தங்கள் பெயர் சேர்க்கவும், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளவும் இச்சிறப்பு முகாம்களுக்கு நேரில் சென்று உரிய படிவங்களை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களோடு வழங்கிடலாம். மேலும், இணையதளம் வழியாகவும் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ளலாம்.



கல்லூரி தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ள நீங்கள் உங்கள் கல்லூரியில் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர்களாக இணைத்துக் கொண்டுள்ளார்களா? என்பதை உறுதி செய்ய வேண்டும். 18 வயது நிரம்பிய அனைத்து மாணவ, மாணவிகளையும் கட்டாயம் பெயர் சேர்த்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இப்பணிகளை மேற்கொள்வதற்காக உங்களுக்கு அனைத்து உதவிகளும் முழுமையாக ஏற்படுத்தி கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Popular Feed

Recent Story

Featured News