மக்களிடம் வசூலிக்கும் வங்கிகள்!
குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்காத வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் ரூ.3,000 கோடிக்கு மேல் அபராதமாக வசூலித்துள்ளன.
ஒருபுறம் பெரும் கடனாளிகளால் வங்கிகளின் வாராக் கடன்கள் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்காத சாதாரண மக்களிடையே வங்கிகள் அதிகளவில் வசூலித்து வருகின்றன. 2017-18 நிதியாண்டில் ரூ.10 லட்சம் கோடிக்கும் மேலான வாராக் கடன்கள் உருவாகுவதற்குப் பெரும் கடனாளிகள் காரணமாக இருந்துள்ளனர். அதேநேரம் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்காத வாடிக்கையாளர்களிடையே பொதுத் துறை வங்கிகள் ரூ.3,551 கோடியை அபராதமாக வசூலித்துள்ளன. இந்த அபராதத் தொகையானது சேமிப்புக் கணக்குதாரர்களிடம் வசூலிக்கப்பட்டுள்ளது.
2014-15 முதல் 2017-18 வரையிலான நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளும் ஐசிஐசிஐ பேங்க், ஆக்சிஸ் பேங்க் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. பேங்க் ஆகிய தனியார் வங்கிகளும் இணைந்து ரூ.11,500 கோடிக்கு மேல் அபராதமாக வசூலித்துள்ளதாக நிதித் துறை அதிகாரி ஒருவர் இந்தியா டுடே ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். 2017-18ஆம் நிதியாண்டில் அதிகபட்சமாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி ரூ.2,500 கோடியை அபராதமாக வசூலித்துள்ளது. தனியார் துறை வங்கிகளில் அதிகபட்சமாக ஹெச்.டி.எஃப்.சி. வங்கி ரூ.600 கோடியை வசூலித்துள்ளது.
வங்கிகள் வழங்கும் சேவைகளுக்குத் தேவையான கட்டணங்களை வசூலித்துக்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியைப் பொறுத்தவரையில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்காத வாடிக்கையாளர்களிடம் ரூ.5 முதல் ரூ.15 வரை அபராதம் வசூலிக்கிறது. இதனுடன் ஜிஎஸ்டியும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது.