Wednesday, October 31, 2018

பட்டாசு வெடிக்கும் 2 மணி நேரம்: தமிழக அரசே முடிவெடுக்கலாம்





தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிக்கப்படும் 2 மணி நேரத்தை தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களே முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.


நாடு முழுவதும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 23ஆம் தேதி இறுதித் தீர்ப்பு அளித்தது.

அதில், அனுமதிக்கப்பட்ட ஒலி மற்றும் புகை வரம்புக்குள் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் மட்டுமே நாடு முழுவதும் விற்கப்பட வேண்டும். அத்தகைய பட்டாசுகள் குறைந்த மாசுபாட்டை ஏற்படுத்தும் பசுமைப் பட்டாசுகளாக இருக்க வேண்டும். தீபாவளி பண்டிகையின் போது நாடு முழுவதும் இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை, 2 மணி நேரம் மட்டும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.


ஆன்லைனில் பட்டாசு விற்பனைக்கு தடைவிதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். எந்த வகையிலும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படக் கூடாது என்று பல்வேறு கட்டுப்பாடுகளை நீதிபதிகள் விதித்திருந்தனர். மேலும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகியவற்றின் போது நள்ளிரவு 11.55 மணியிலிருந்து 12.30 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தத் தீர்ப்பு தொடர்பாக தமிழக அரசு சார்பில் வழக்குரைஞர் பா. வினோத் கன்னா, உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கோரும் மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தார். அதில், தீபாவளியன்று நாடு முழுவதும் பட்டாசு வெடிப்பதற்கு இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தீபாவளி அதிகாலையில் பட்டாசு வெடித்து கொண்டாடப்படுகிறது.




தீபாவளி கொண்டாட்டம் நாள் முழுவதும் இருக்கும். இந்நிலையில், பட்டாசு வெடிப்பதற்கு இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டும் என விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு காரணமாக பட்டாசு வெடிக்கும் உரிமையை தமிழக மக்கள் இழந்துள்ளனர். எனவே, தீபாவளி பண்டிகையின் போது, தமிழக மக்களின் கலாசார ரீதியாக அதிகாலை 4.30 மணி முதல் காலை 6.30 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்கி அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இதனிடையே, பசுமை பட்டாசு தொடர்பாக விளக்கம் கோரி பட்டாசு உற்பத்தியாளர்கள் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் அனைத்தும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன.




அப்போது, பட்டாசு உற்பத்தியாளர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் ரஞ்சித் குமார் ஆஜராகி, உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள பசுமை பட்டாசுகள் நிகழாண்டு தயாராகவில்லை. பட்டாசு வெடிக்கும் நேரத்தை தவிர்த்து மீதமுள்ள உத்தரவுகள் நாடு முழுவதும் பொருந்துவதாக தீர்ப்பு பார்க்கப்படுகிறது. எனவே, இது குறித்து விளக்கம் தேவை. மேலும், பேரியம் உப்பு இல்லாமல் பட்டாசுகள் தயாரிக்க முடியாது என்றார்.

அப்போது குறுக்கிட்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆத்மராம் நத்கர்னி, பேரியம் உப்பு இல்லாமல் பட்டாசுகள் தயாரிக்க முடியுமென துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் என்றார். அப்போது, இது தொடர்பாக பிரமாணப்பத்திரத்தை புதன்கிழமைக்குள் (அக். 31) தாக்கல் செய்யுங்கள் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து, பட்டாசு உற்பத்தியாளர்கள் சார்பில் ஆஜரான மற்றொரு வழக்குரைஞர் ராஜீவ் தத்தா, தலைநகர் தில்லியிலும் தமிழர்கள் வசிக்கின்றனர். எனவே, பட்டாசு வெடிக்கும் நேரத்தை மாற்ற வேண்டும் என்றார்.

அப்போது, வட இந்தியாவில் வாழும் போது வட இந்தியர்கள் கொண்டாடுவதைப் போலவும், தென்னிந்தியாவில் வாழும் போது அங்கு கொண்டாடுவதைப் போலவும் தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.



இதைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயணன், மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்டே, வழக்குரைஞர் பா. வினோத் கன்னா ஆகியோர், தமிழகத்தில் இரவில் பட்டாசு வெடிக்கும் கலாசாரம் இல்லை. எனவே, தமிழகத்தில் அதிகாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றனர்.
வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழகம், புதுச்சேரி மற்றும் தென் மாநிலங்களில் தீபாவளி நாளில் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் எனத் தெரிவித்தனர்.

இதன் மூலம், பட்டாசு வெடிப்பதற்கு இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டும் என விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு, தென்மாநிலங்களுக்குத் தளர்த்தப்பட்டுள்ளது. மேலும், பட்டாசு வெடிக்கப்படும் நேரத்தை தென்மாநில அரசுகளே முடிவு செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
மேலும், தீர்ப்பில் தெரிவிக்கப்பட்ட பசுமை பட்டாசு தில்லி, தேசியத் தலைநகர் வலய (என்சிஆர்) பகுதிக்கு மட்டுமே பொருந்தும் என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.




அரசு ஆலோசனை
தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை வரையறை செய்வது தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
இது தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காலை அல்லது இரவு வேளையில் இரண்டு மணி நேரத்தை தமிழக அரசே வரையறுத்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை வரையறுப்பது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. இது குறித்து, தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகையில், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் தலைமையில் தீபாவளி பண்டிகையன்று எப்போது பட்டாசு வெடிப்பது என்பது குறித்து செவ்வாய்க்கிழமை ஆலோசனைகள் நடைபெற்றன.
இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, முதல்வர் பழனிசாமியிடம் தெரிவிக்கப்பட்டு இறுதி அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும். இந்த அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகக் கூடும் எனத் தெரிவித்தன.

Popular Feed

Recent Story

Featured News