Saturday, October 27, 2018

ஏழு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள, 'ஸ்மார்ட்' வகுப்பு திட்டங்கள் நடைமுறைக்கு வருமா என, பெற்றோர் எதிர்பார்ப்பு




ஒருங்கிணைந்த கல்வி திட்டத்துக்கு புதிய இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஏழு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள, 'ஸ்மார்ட்' வகுப்பு திட்டங்கள் நடைமுறைக்கு வருமா என, பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.

மத்திய அரசு சார்பில், அனைவருக்கும் இடைநிலை கல்வி மற்றும் அனைவருக்கும் கல்வி ஆகிய திட்டங்கள் வழியாக, அனைத்து மாநில பள்ளிகளுக்கும், உள்கட்டமைப்புக்கு நிதி வழங்கப்படுகிறது. இந்த இரண்டு திட்டங்களும், சமீபத்தில் ஒருங்கிணைந்த கல்வி திட்டம் என்ற, 'சமக்ரா சிக் ஷா' திட்டம் என, பெயர் மாற்றப்பட்டது.

தமிழகத்தில், சமக்ரா சிக் ஷா திட்டத்தில், திட்ட இயக்குனராக, சுடலை கண்ணன் என்ற, ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியாற்றி வருகிறார். அவருக்கு கீழ், வெங்கடேஷ் என்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, கூடுதல் திட்ட இயக்குனர் - 1 என்ற பொறுப்பில் உள்ளார்.சமீபத்தில், பள்ளி கல்வி இணை இயக்குனரில் இருந்து, இயக்குனராக பதவி உயர்வு பெற்ற, குப்புசாமி, கூடுதல் திட்ட இயக்குனர் - 2 என்ற பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். 



இவர், மூன்று நாட்களுக்கு முன், புதிய பதவியை ஏற்றுள்ளார்.இவருக்கு, 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் பணி வழங்கப்பட்டுஉள்ளது. இந்த துறையில், ஏழு ஆண்டுகளாக, மத்திய அரசு நிதி அனுமதித்த பல திட்டங்கள், இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

குறிப்பாக, ஐ.சி.டி., என்ற, கணினி வழி கல்வி வழங்கும், ஸ்மார்ட் வகுப்பு திட்டத்திற்கு, மத்திய அரசு நிதி ஒதுக்கிஉள்ளது. ஆனால், மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டு, டெண்டர் விட்டு, பணியை செயல்படுத்த, தமிழக அரசு முன்வரவில்லை. அதேபோல், உயர்நிலைப் பள்ளிகளில், தொழிற்கல்வியை கட்டாயமாக அறிமுகம் செய்ய, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதையும், தமிழக அரசு இன்னும் அமல்படுத்தவில்லை. இப்படி, பல்வேறு சவால்கள் நிறைந்த பிரிவில், புதிய இயக்குனர் குப்புசாமி சாதிப்பாரா; அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் தரத்தை உயர்த்துவாரா என, பெற்றோர் எதிர்பார்ப்பில் உள்ளனர்



Popular Feed

Recent Story

Featured News