Tuesday, October 30, 2018

வரியை ஒழுங்காக கட்டியிருந்தாலும் ரிட்டர்ன் முக்கியம் யாருக்கு வருமான வரி நோட்டீஸ் வரும்?

வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யும் போது எந்த தகவல்களையும் மறைக்க முயற்சிக்க கூடாது.





டிடிஎஸ் சான்றிதழில் உள்ள விவரங்களுக்கும் நீங்கள் தரும் வருமானம், செலவுக் கணக்குக்கும் முரண்பாடு இருக்கக்கூடாது.

வங்கி கணக்கில் கிடைத்த வட்டி வருவாயில் வரி பிடித்தம் குறித்து சரியான
விவரம் ேதவை.

நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு ஒரு நாள் தாமதம் என்றால் கூட சிக்கல் தான்.

எந்தெந்த விதிப்பிரிவின் கீழ் வரவு, செலவுகளை பட்டியலிட வேண்டும் என்று அறிந்து சரியாக பதிவு செய்ய வேண்டும்.

மும்பை, அக் 30: உங்களுக்கு வருமான வரித்துறையில் இருந்து, ரிட்டர்ன் தாக்கல் தொடர்பாக நோட்டீஸ் வந்துள்ளதா? அப்படியானால் எச்சரிக்கையாக இருங்கள். 30 நாளுக்குள் பதில் அளிக்க வேண்டும். 



இல்லாவிட்டால், மேலும் சிக்கல் ஏற்படும். வருமான வரிக்கான டிடிஎஸ் மாதாமாதம் பிடித்தாலும், வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்தாக வேண்டும். நான் அதிகமாக வரி கட்டி விட்டேன்; அந்த ரீபண்ட்டு கூட வேண்டாம் என்று தான் ரிட்டர்ன் தாக்கல் செய்யவில்லை என்றாலும் சிக்கல் தான்; ரீபண்ட் வந்தாலும், வரி வரம்புக்குள் வராத அளவுக்கு சம்பளம் வாங்கினாலும், ஆண்டுக்கு ஆண்டு ரிட்டர்ன் தாக்கல் செய்தாக வேண்டும். இல்லாவிட்டால் நோட்டீஸ் பறக்கும். அதன் பின், அடுத்தடுத்த நடவடிக்கை பாயும்.

சரி, வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யவில்லை என்றால் தானே நோட்டீஸ் வரும் என்று நினைக்க வேண்டாம். வருமானம், செலவுக்கணக்கு, வங்கி கணக்கு வட்டிக்கு வரி கட்டிய விவரங்கள் எல்லாம் சரியாக இல்லாமல் இருந்தாலும், நோட்டீஸ் வரும். அதுபோல, வரிச்சலுகைக்கான 80 டி என்பதற்கு பதில் தவறான விதிப்பிரிவை போட்டிருந்தாலும், எச்ஆர்ஏ. வரவில் குறைவான தொகையையோ போட்டிருந்தாலும் கூட நோட்டீஸ் வரும். 

இப்படி நோட்டீஸ் வந்தால் அதற்கு பதில் அளிக்கும் வகை ரீபண்ட் கூட வராது. இப்போதெல்லாம் பெரும்பாலோர் ஆடிட்டரை கூட அணுகி ரிட்டர்ன் தாக்கல் செய்ய கேட்பதில்லை. தாங்களே, கம்ப்யூட்டர் ஆன்லைனில் போய் ரிட்டர்ன் தாக்கல் செய்து விடுகின்றனர். அப்படி செய்யும் போது தான் இப்படிப்பட்ட தவறுகள் வருகின்றன. மேலும், சிறிய எழுத்துப்பிழை பெயரிலோ, வேறு முக்கிய தகவல்களிலோ ஏற்பட்டுவிட வாய்ப்பு இருக்கிறது.

இதனால் கூட நோட்டீஸ் வரும். இப்படிப்பட்ட விஷயங்களுக்காக வருமான வரித்துறை அதிகாரிகள், வருமான வரி சட்டம் 143(1)ல் ஏ பிரிவின் கீழ் உள்ள விதிகள் படி நோட்டீஸ் அனுப்புவர். அப்படி அனுப்பிய நாளில் இருந்து 30 நாளுக்குள் பதில் அளிக்க வேண்டும். ரிட்டர்ன் தாக்கல் செய்யாமல் இருந்தால் உடனே தாக்கல் செய்ய வேண்டும். 



அப்படி தாக்கல் செய்யும் போது, விடுபட்டிருந்தால் முந்தைய ஆண்டுகளுக்கு செய்ய வேண்டும்.

வருமானம், செலவுகள் போன்றவை சரியாக இல்லை என்று சுட்டிக்காட்டியிருந்தால், அதை ஆன்லைனில் சரி செய்து அனுப்பலாம். சில ஆவணங்கள் தேவைப்படும் என்றால் அதை ஆன்லைனில் அப்லோடு செய்து அனுப்பலாம். சில கணக்குகள் சரி தான் என்று எண்ணினால், அதற்கான ஆவணங்களை உடன் இணைத்து ஆன்லைனில் அனுப்பலாம்.

இப்படி செய்ய 30 நாள் அவகாசம் தரப்படுகிறது. அப்படி செய்யாவிட்டால், வருமான வரித்துறை வருவாய் பிரிவு அதிகாரிகள் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பர். வருமான வரி சட்டத்தின்படி, உங்களின் வருமான வரி ரிட்டர்ன் தாக்கலில் உள்ள தவறுகளை , நீங்கள் சமர்ப்பித்துள்ள டிடிஎஸ் சான்றிதழ், வங்கி கணக்கு விவரங்கள், வட்டி விவரங்கள் போன்வற்றை அடிப்படையாக வைத்து புதிய அசெஸ்மென்ட் அறிக்கை தயாரிப்பர். 



அப்படி தயாரித்து உங்களுக்கு அனுப்புவர். அதன் படி நீங்கள் வரியை கூடுதலாக கட்டி விட வேண்டும். இல்லாவிட்டால், உங்களுக்கு அடுத்தடுத்த நோட்டீஸ் வரும்.

Popular Feed

Recent Story

Featured News