Wednesday, October 10, 2018

பள்ளி மேலாண் குழுவில் எம்.எல்.ஏ.,க்களுக்கு இடம்

பள்ளிகளின் மேலாண்மை குழுவில், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை சேர்க்க, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.



அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வி தரத்தை மேம்படுத்த, மத்திய அரசின் சார்பில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்ககம் போன்றவை, நடைமுறையில் உள்ளன.

நடப்பு கல்வி ஆண்டில், இரு திட்டங்களும் இணைக்கப்பட்டு, 'சமக்ரா சிக் ஷா' என்ற, ஒருங்கிணைந்த கல்வி திட்டம், அமலுக்கு வந்துள்ளது. இதில், பள்ளிகளில், மேலாண்மை குழு அமைக்க,மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு பள்ளிக்கும், தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகி, பெற்றோர் பிரதிநிதிகள், மாணவர் பிரதிநிதிகள், உள்ளாட்சி உறுப்பினர், கல்வி அதிகாரிகள், ஓய்வுபெற்ற கல்வி அதிகாரிகள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் கல்வியாளர்கள், அதில் இடம்பெற வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.

இவர்களுடன், அந்தந்த பள்ளிகள் உள்ள தொகுதியின், மூத்த, எம்.எல்.ஏ., அல்லது எம்.பி., ஆகியோரையும், உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். பள்ளி மேலாண்மை குழு, அடிக்கடி கூடி விவாதித்து, பள்ளியின் முன்னேற்றம் குறித்து, முடிவு செய்ய வேண்டும். அதன் அறிக்கையை, நிதி செலவு தணிக்கை அறிக்கையுடன் சேர்க்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.



இதை பின்பற்றி, தமிழகத்தில் உள்ள, அரசு பள்ளிகளின் மேலாண்மை குழுக்களில், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களை உறுப்பினர்களாக சேர்த்து, ஆலோசனை கூட்டம் நடத்த, சமக்ரா சிக் ஷா திட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

Popular Feed

Recent Story

Featured News