Monday, October 29, 2018

தமிழக வனத் துறை காலிப் பணியிட போட்டித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி

தமிழக வனத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.

இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்திருப்பதாவது:



தமிழக வனத் துறையில் வனவர் பணியிடங்களுக்கு 300 பேரும், வனக் காப்பாளர் பணியிடங்களுக்கு 726 பேரும், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கு 176ம் என மொத்தம் 1,178 பணியிடங்களுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. 

இப்பணியிடங்களுக்கான கல்வித் தகுதியாக வேளாண்மை, கால்நடை அறிவியல், தாவரவியல், வேதியியல், கணினி அறிவியல், உயிரியல், வனவாழ்வு உயிரியல், பொறியியல், சூழ்நிலை அறிவியல், வனவியல், புவியியல் போன்ற பட்டப் படிப்புகளைப் படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

இதற்கான கல்வித் தகுதியாக ஏதாவது ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதேபோல, விண்ணப்பதாரர்களில் பொதுப் பிரிவினரில் 30 வயதுக்கு உள்பட்டவர்களாக இருப்பதுடன், ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 5 வயது தளர்வும் உண்டு. 



இதற்கான விண்ணப்பங்களை இணைய வழியில் விண்ணப்பிக்க நவம்பர் 5ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்புக்காக மட்டும் நம்பிக் காத்திருக்காமல் போட்டித் தேர்வுகளை எழுதி வெற்றி பெற்று வனத் துறையில் வேலைபெற இது ஒரு வாய்ப்பாகும்.

இத்தேர்வுகளுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு உதகையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வப் பயிலும் வட்டத்தின் சார்பில் நவம்பர் 1ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. 

இதுதொடர்பான கூடுதல் விவரங்களை 0423-2223346 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Popular Feed

Recent Story

Featured News