Friday, October 12, 2018

எல்.கே.ஜி., யு.கே.ஜி.க்கு வரைவுப் பாடத் திட்டம் வெளியீடு

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ப்ரீ.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. ஆகிய பள்ளி முன்பருவக் கல்விக்கான பாடத்திட்டம், மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (எஸ்சிஇஆர்டி) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 



இதுதொடர்பாக கல்வியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அக்டோபர் 30 -ஆம் தேதி வரை கருத்துக் கூறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எஸ்சிஇஆர்டி இயக்குநர் க.அறிவொளி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

பள்ளி முன்பருவக் கல்வித் திட்டம் நாடு முழுவதும் ஒரு அமைப்பாக இருக்க வேண்டும் என, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. 

அதன் அடிப்படையில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ் ஆகியோர் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு பள்ளி முன்பருவ கல்விக்கான பாடத் திட்டத்தை தயாரிக்க ஆணையிட்டு அதற்கான சில வழிகாட்டுதல்களையும் தெரிவித்தனர். 




இந்த வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் பள்ளி முன்பருவக் கல்விக்கான பாடத்திட்டத்தை தமிழ், ஆங்கில வழியில் எஸ்.சி.இ.ஆ.ர்டி. உருவாக்கியுள்ளது. இந்தப் பாடத்திட்டம் www.tnscert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வல்லுநர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவர்கள் ஆகியோர் தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை, சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் உள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு கடிதம் மூலமாகவோ அல்லது awpb2018@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அக்டோபர் 30 -ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Popular Feed

Recent Story

Featured News