Wednesday, October 31, 2018

வாட்ஸ் ஆப்... புதிய சேவைகள்!

பயனாளிகளின் தேவைக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களை வாட்ஸ் ஆப் கொண்டு வருகிறது. தற்போது பயன்பாட்டாளர்களுக்கு மேலும் பாதுகாப்பு அம்சத்தை அதிகரிக்க அந்த நிறுவனம் புதிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.




கைரேகை, முகபாவம் ஆகியவற்றைப் பதிவு செய்து ஸ்மார்ட் போன்களுக்குள்ளே நுழைகிறோமோ, அதுபோல வாட்ஸ் ஆப்பிலும் நுழைய இந்த பாதுகாப்பு அம்சம் கொண்டு வரப்பட உள்ளது.



இந்த புதிய முறைப்படி, வாட்ஸ் ஆப்பிற்குள் நுழைய முதலில் கைரேகை, முகபாவம் ஆகியவற்றைப் பதிவு செய்யும்படி கேட்கும். இது ஒத்து போகவில்லை என்றால், பாஸ்கோட் எனும் ரகசிய எண்களைப் பதிவு செய்ய வாட்ஸ் ஆப் கேட்கும். 



அதன் பிறகுதான் நமது வாட்ஸ் ஆப்பைப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் ஒருவரின் வாட்ஸ் ஆப் பயன்பாட்டை மேலும் பாதுகாப்பானதாக மாற்ற முடியும். இந்த புதிய வசதி ஐ போன்களுக்கு வந்துவிட்டதாகவும், ஆன்ட்ராய்ட் போன்களுக்கு அடுத்த கட்டமாக வரும் என்றும் கூறப்படுகிறது.

இதேபோல், வாட்ஸ் ஆப்பில் ஒருவருக்கு தவறுதலாக அனுப்பப்பட்ட தகவலை டெலிட் செய்யும் வசதிக்கு அளிக்கப்பட்டிருந்த அவகாசம் 13 மணி 8 நிமிடம் 16 நொடிகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 

முன்பு இந்த அவகாசம் ஒரு மணி 8 நிமிடம் 16 நொடிகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த அவகாசத்திற்குள் தகவல் பெறப்பட்டவர் அந்தத் தகவலை டவுன்லோடு செய்து பார்த்துவிட்டால் எதுவும் செய்ய இயலாது.

மேலும், தேவையற்ற குழுக்களில் இருந்து வரும் தகவல்களை நாம் "மியூட்' செய்து வைப்பதுண்டு. ஆனாலும் அந்தத் தகவல்கள் வாட்ஸ் ஆப் முன்பகுதி (நோட்டிபிகேஷன்) திரையில் சத்தமில்லாமல் வெளியாகும். இதைத் தடுக்கும் வகையில் "வெகேஷன் மோட்' எனும் புதிய சேவையை வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்ய உள்ளது. 



இதன் மூலம் "மியூட்' செய்யப்பட்ட குழுக்களின் தகவல்களின் வரவைக் காண்பிக்காது. மேலும் வாட்ஸ் ஆப் கணக்குகளை இன்ஸ்டாகிராமுடன் இணைக்கும் புதிய சேவைக்கான முயற்சியும் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular Feed

Recent Story

Featured News

Back To Top