Monday, October 8, 2018

மாணவர்களின் கவனத்திறனை பரிசோதிக்கலாமா?

சிறந்த மாணவர்களின் பண்புகளில் ஒன்று கவனத்திறன். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போதும், நாமாக பாடம் படிக்கும்போதும் கவனம் சிதறாமல் இருந்தால் நமக்கு எளிதில் பாடங்கள் விளங்கிவிடும். 



நன்றாகப் படித்தும் பாடங்கள் நினைவில் நிற்காமல் போவதற்கு கவனச்சிதறல் காரணமாக இருக்கலாம். உங்களின் கவனத்திறன் எப்படி? உங்களிடம் கவனச்சிதறல் இருக்கிறதா? அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்த பரிசோதனை மூலம் பார்க்கலாம்.
கேள்விகளுக்கு செல்லலாமா?


1. ஒரு பாடம் அல்லது பயிற்சி சிரமமாக இருந்தால் அதை உடனே நிராகரிப்பீர்களா?

அ. ஆமாம், அதுதான் எனக்கு தெரியவில்லையே.

ஆ. முயற்சித்துப் பார்க்கிறேன், ஆனாலும் விளங்கவில்லை. இ. இல்லை. அதை நிச்சயம் தெரிந்து கொள்ள முயற்சிப்பேன். ஆசிரியரிடம் விளக்கம் கேட்பேன்.

2. பேனா, பென்சில் போன்றவற்றை அடிக்கடி மறந்துவிடுகிறீர்களா? இவற்றை இரவல் வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணம் உங்களுக்கு உண்டா?



அ. மறதி இயல்புதானே, நண்பர்களிடம் இரவல் கேட்பதில் தவறில்லையே.

ஆ. மறந்துவிட்டால் இரவல் வாங்கித்தானே ஆக வேண்டும்.

இ. மறக்கமாட்டேன், என்னிடம் அவசர தேவைக்கான கூடுதல் பேனா, பென்சில்கூட இருக்கும்.



3. ஆசிரியர் பாடம் நடத்தும்போது எழும் சிறு சத்தம் அல்லது வெளிப்புற நிகழ்வு உங்களை ஈர்க்கிறதா?

அ. அது என்ன? என்று ஜன்னலில் பார்ப்பேன். நண்பனிடம் பேசுவேன்.
ஆ. ஆசிரியரை கவனிப்பேன். எல்லோரும் வேடிக்கை பார்த்தால் நானும் பார்ப்பேன்.

இ. மற்றவற்றை கவனிக்க மாட்டேன், திடீர்நிகழ்வுகளை மற்றவர் சொன்னால் கேட்டுக் கொள்வேன்.


4. நீங்கள் படிக்கும் இடத்தில் டி.வி. ஓடுகிறதா?


அ. வீட்டில் எல்லாம் இருக்கத்தானே செய்யும். டி.வி. பார்த்துக் கொண்டே படிப்பேன்.

ஆ. டி.வி. ஓடும், சத்தத்தை குறைக்க சொல்லிவிட்டு படிப்பேன்.

இ. படிப்பதற்கு தனி இடம் செல்வேன். படிக்கத் தொடங்கினால் டி.வி. போடமாட்டார்கள்.

5. பாடம் நடத்தும்போது எடுத்த கிறுக்கல் குறிப்புகளை, பின்னர் உங்களால் விளங்கிக் கொள்ள முடிகிறதா?
அ. குறிப்பு எடுக்க சொன்னதற்காக எழுதுவேன். பிறகு புரிவதில்லை.

ஆ. விவரமாக குறிப்பெடுக்க நினைப்பேன் முடிவதில்லை.

இ. ஆம், என் கிறுக்கல்கள், எனக்கு விஷயங்களை விளக்கிவிடும்.




6. யாராவது பேசும்போது குறுக்கீடு செய்து பேசுகிறீர்களா?

அ. ஆமாம். நான் என் கருத்தை சொல்ல வேண்டாமா?
ஆ. பேச தயக்கமாக இருக்கும்.

இ. இடையில் பேச மாட்டேன். வாய்ப்பு கிடைக்கும்போது என் கருத்துகளை சொல்வேன்.

7. வகுப்பறை சலித்துவிட்டதா?

அ. ஆம். ஓய்வே இல்லையே.

ஆ. வேறு வழியில்லையே.

இ. படிக்கத்தானே வந்திருக்கிறோம். படிப்பதில்தான் விருப்பம் அதிகம்.


8. ஒரு கேள்வி கேட்கும் போதே பதிலை உளறிக் கொட்டுவது உண்டா?
அ. பதில் தெரிஞ்சா சொல்ல வேண்டியதுதானே.

ஆ. பதில் தெரிந்தாலும் சொல்வதற்கு கூச்சப்படுவேன்.

இ. என்னை பதில் சொல்ல அழைத்தால் பதில் சொல்வேன். அல்லது அனுமதி பெற்று பதிலளிப்பேன்.


9. குறிப்புகளை படிக்காமல் விடையளித்திருக்கிறீர்களா?

அ. தேர்வே பிடிக்காது. விடை எழுத சிரமப்படுவேன்.

ஆ. குறிப்புகளை மறந்து நிறைய வினாக்களுக்கு விடை எழுதியிருக்கிறேன்.

இ. இல்லை. குறிப்புகளை படித்த பின்புதான் விடையளிக்க ஆரம்பிப்பேன்.


10. வீட்டுப்பாடத்தை எப்போது எழுதுவீர்கள்?

அ. பள்ளி கிளம்பும் முன்பு.

ஆ. இரவில் தூங்கும் முன்பு

இ. வீட்டுப்பாடம் முடித்துவிட்டுத்தான் வேறுவேலை.


11. ஒரு புதிய பயிற்சி வழங்கினால் அதை சரியாக, சீராக செய்து முடிப்பதில் சிரமம் இருக்கிறதா?

அ. ஆம், அதிக பயிற்சியால் அவதிப்படுகிறேன்
ஆ. சிரமமாக இருந்தாலும் செய்து முடிப்பேன்.

இ. இல்லை, புதிய புதிய பயிற்சிகள் உற்சாகம் தருகின்றன




12. இணையதளத்தில் ஒரு வேலை கொடுத்தால், நீங்களாகவே முயன்று முடித்துவிடுவீர்களா?

அ. ம்ஹூம், இன்டர்நெட் என்னை குழப்பிவிடும், நண்பர்களின் உதவியுடன்தான் கேட்டு செய்வேன்.

ஆ. செய்ய முயற்சிப்பேன், சந்தேகம் வந்தால் நண்பர்களிடம் கேட்பேன்.

இ. என்னால் அது முடியும். தேவையான விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறேன்.


13. நீண்ட நேரம் கருத்தரங்கம், பயிற்சி வகுப்பில் இருக்க நேர்ந்தால் எப்படியிருக்கும்?

அ. வெறுப்பாக இருக்கும், அரட்டையடித்து பொழுதுபோக்கி மகிழ்வேன்.
ஆ. சலிப்பாக இருக்கும். வேறுவழியில்லையே.

இ. பயனுள்ள கருத்துகளை கவனித்துக் கொண்டே இருப்பேன். அதற்காகத்தானே வந்திருக்கிறோம்.

14. கொடுத்த பயிற்சி உங்களுக்கு தெரியாதது, விருப்பமில்லாதது என்பது தெரியவரும்போது என்ன செய்வீர்கள்?

அ. 'என்னம்மா இப்டி பண்றாங்களேம்மா'ன்னு நினைப்பேன். இடையில் நிறுத்திவிடுவேன்.

ஆ. தெரிந்ததை செய்வோம் என நினைப்பேன்.

இ. எப்படியாவது செய்து முடிக்க வேண்டும். அதை தெரிந்து கொள்ள வேண்டும் என நினைப்பேன்.


15. உரையாடும்போது நீங்கள் எப்படி பேசுவதாக மற்றவர்கள் கூறுகிறார்கள்?

அ. என்னை யாரும், எதுவும் சொல்ல முடியாது.
ஆ. நி
னைத்ததை சொல்லிமுடித்துவிடுவேன், மற்றவர்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை.

இ. நன்றாக பேசியதாக கூறுவார்கள். நிறைய விஷயங்கள் பேசியதாக பாராட்டுவார்கள்.

16. கவனக்குறைவால் தவறுகள் ஏற்பட்டதை யாராவது சுட்டிக் காட்டினால் என்ன செய்வீர்கள்?

அ. அவர்களுக்கு வேறு வேலையில்லை என நினைப்பேன்.

ஆ. தவறுகளை குறைக்க நினைப்பேன், ஆனாலும் முடியவில்லை.

இ. தவறுகள் வராது. வந்தால் அடுத்தமுறை கண்டிப்பாக சரிசெய்துவிடுவேன்.




17. பள்ளியில் உங்கள் நடவடிக்கைகள் நாள்தோறும் மாறுகிறதா?

அ. நான் அப்படித்தான். 'நமக்குன்னு ஒரு 'கெத்து' வேண்டாமா?'
ஆ. அமைதியாக இருப்பேன், கூச்சம் அதிகம்.

இ. என் நடவடிக்கைகளை யாரும் விமர்சனம் செய்ததில்லை. நல்ல பெயர் எடுத்திருப்பதாகவே கருதுகிறேன்.


18. விருப்பமானதை விட்டுக் கொடுக்கவும், அவசியமானதை கடைப்பிடிக்கவும் முடிகிறதா?

அ. நான் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.

ஆ. மாற்றங்களை கடைப்பிடிக்க முயற்சிக்கிறேன்.

இ. தேவையற்றதை விட்டுவிடவும், அவசியமானதை கடைப்பிடிக்கவும் என்னால் முடியும்.

இப்போது மதிப்பீட்டிற்கு வருவோம். ஒவ்வொரு கேள்வியின் முதலாவது

(அ) பதிலுக்கு 2 மதிப்பெண்கள் வழங்கிக் கொள்ளுங்கள். இரண்டாவது

(ஆ) பதிலுக்கு 5 மதிப்பெண்கள் வழங்குங்கள், மூன்றாவது

(இ) பதிலுக்கு 10 மதிப்பெண்கள் வழங்குங்கள். இப்போது உங்கள் பதில்களுக்கான மொத்த மதிப்பெண்களை கூட்டுங்கள். மதிப்பெண்களுக்கு ஏற்ப கவனத்திறனை மதிப்பிட்டு மாற்றம் செய்து கொள்ளலாம்.

உங்கள் மதிப்பெண்கள் 60-க்குள் இருந்தால்

நீங்கள் எதையும் இயல்பாக அணுகும் பண்புள்ளவர். உங்களால் வாழ்வில் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க முடியும். ஆனால் அசட்டையான வேடிக்கை பண்புகளால் கவனத்திறனில் சற்று பின்தங்கியிருக்கிறீர்கள். இருந்தாலும் உங்களுக்கு ஒரு உத்வேகம் வரும்போது துடிப்புடன் செயல்படக்கூடியவர்கள். அப்போது உங்கள் கவனம் சிதறுவதில்லை. எதையும் அலட்சியம் இன்றி அணுகும்போது உங்களை யாரும் வெற்றி கொள்ள முடியாது. விருப்பமுள்ள விஷயங்களில் நீங்கள் காட்டும் அக்கறையை மாணவப் பருவத்தில் படிப்பதற்கும் கவனம் செலுத்தினால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பச்சை காய்கறிகள், கீரைகள், தயிர், முட்டை, மீன் போன்றவை நினைவுத்திறனை அதிகரித்து, கவனச்சிதறலை குறைக்கும்.

உங்கள் மதிப்பெண்கள் 120-க்குள் இருந்தால்.

நீங்கள் போட்டி மனப்பான்மை கொண்டவர். கோபம் அதிகமாக வரும். எதையும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும் பாடத்தை சீக்கிரமே கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் உங்களிடம் உண்டு. ஆனாலும் தயக்கம் அதற்கு தடையாய் இருக்கும். நீங்கள் நிதானத்தை கடைப்பிடித்தால் நிறைய சாதிக்கலாம். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். உணவுக்கும் குணாதிசயங்களுக்கும் சம்பந்தம் இருப்பதால் உலர்ந்த பழங்கள், பச்சைக்காய்கறிகள் எடுத்துக்கொள்வது உங்கள் மூளையை சுறுசுறுப்பாக்கி கவனத்திறனை வளர்க்கும்.

உங்கள் மதிப்பெண்கள் 120-க்கு மேல் இருந்தால்

நீங்கள் சிறந்த மாணவராக எல்லோர் முன்னிலையிலும் பேசப்படுகிறீர்கள். ஆசிரியர்களின் செல்லப்பிள்ளையாக இருப்பீர்கள். அவர்கள் வாக்கை அப்படியே ஏற்று செய்யும் மனப்பாங்கு கொண்ட நீங்கள் பேச்சுப் போட்டி, எழுத்துப்போட்டி, தேர்வு எல்லாவற்றிலும் சாதிப்பீர்கள். விளையாட்டு போட்டிகளிலும் கவனம் செலுத்தினால் உங்களது திறமை விரிவடையும். ஓட்ஸ் கஞ்சி, பருப்புகள், கொட்டை வகைகள், தானியங்கள், மீன் வகைகளும் எடுத்துக் கொள்வது சிறந்த கவனத்திறனுக்கு துணை செய்யும்.



Popular Feed

Recent Story

Featured News