Sunday, October 28, 2018

காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் தொடர் மறியல் போராட்டம் சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு

காலி பணியிடங்களை நிரப்பவேண்டும், காலமுறை ஊதியம் வழங்கவேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கட்டங்களாக தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.



அந்தவகையில், சத்துணவு ஊழியர்கள் மாநிலம் முழுவதும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டத்தை நேற்று இரவுடன் முடித்துவிட்டு, அடுத்தக்கட்டமாக தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முடிவு செய்துள்ளனர்.

தொடர் மறியல் போராட்டம்

இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.நூர்ஜஹான் சென்னையில் நேற்று இரவு நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். போராடும் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தொடர் காத்திருப்பு போராட்டத்தை இன்று (நேற்று) இரவோடு முடித்துக்கொள்கிறோம்.



மேலும் திருச்சியில் நடந்த மாநில செயற்குழு முடிவின்படி, 29-ந்தேதி (நாளை) முதல் மாநிலம் முழுவதும் சத்துணவு மையங்களை இழுத்து மூடிவிட்டு தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முடிவு எடுத்துள்ளோம். சென்னையில் கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற உள்ள மறியல் போராட்டத்துக்கு எங்கள் சங்கத்தின் மாநில தலைவர் ப.சுந்தரம்மாள் தலைமை தாங்குவார். இதேபோல மாநிலம் முழுவதும் எழுச்சியுடன் தொடர் மறியல் போராட்டங்கள் நடைபெறும். கோரிக்கைகள் நிறைவேறும் வரையிலும் போராட்டம் தொடரும்.

Popular Feed

Recent Story

Featured News