Sunday, October 7, 2018

பயோமெட்ரிக் தகவலுக்கு இனி முகத்தைக் காட்டினால் போதும்:-மத்திய அரசின் புதிய அறிவிப்பு!


முகத்தைக் காட்டினால் போதும்!
பயணிகள் தங்கள் பயோமெட்ரிக் தகவலைப் பயன்படுத்தி விமான நிலையத்திற்குள் நுழையும் வகையில், கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 4) அன்று மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.



இந்திய விமான நிலையங்களில் ஆண்டுக்கு 33.4 கோடி பேர் பயணம் செய்கின்றனர். கூட்ட நெரிசலால், விமான நிலைய வாயில்களில் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனைத் தவிர்க்க, டிஜி யாத்ரா என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

டிஜி யாத்ரா என்ற திட்டமானது, 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைமுறைக்கு வரும் என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறுகையில், டிஜி யாத்ரா தளத்தில் இணையும் விமானப் பயணிகள் தனித்துவமான ஐடியை உருவாக்கிக் கொள்ள வேண்டுமென்று தெரிவித்தார். மேலும், “பயணிகளின் பெயர், மின்னஞ்சல் முகவரியுடன் டிக்கெட்டும் இருக்கும். இதில், அங்கீகரிக்கப்பட்ட விவரங்களை மட்டுமே பயணிகள் வழங்க வேண்டும். முக அடையாளங்கள் சேகரிக்கப்படும். அதன் மூலமாக, விமான நிலையத்துக்குள் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். இது காகிதமற்ற மற்றும் தொந்தரவு இல்லாத விமானப் பயணத்தை ஊக்குவிப்பதாக அமையும்” என்று கூறினார்.



விமான நிலையத்திற்குள் செல்வதற்குப் பல்வேறு நிலைகளைத் தாண்டிச் செல்ல வேண்டியிருக்கிறது என்று பயணிகள் தொடர்ந்து புகார் அளித்து வருவதாகத் தெரிவித்தார். “இந்த முறையினால், இனிமேல் அந்தப் பிரச்சினை இருக்காது. இது பாதுகாப்பான பயணத்துக்கு வழி வகுக்கும். சோதனையின் அடிப்படையில், இது திறமையான மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அமைப்பாகும். இந்தத் திட்டத்தில், காலப்போக்கில் உணவு மற்றும் புத்தக வாசிப்பு போன்ற அம்சங்களும் சேர்க்கப்படும்” என்று சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

Popular Feed

Recent Story

Featured News