Saturday, November 17, 2018

வங்கக் கடலில் அடுத்த புயல் சின்னம்: 19ம் தேதி முதல் மழை பெய்யும்





சென்னை: கஜா புயல் கரையை கடந்த நிலையில் அடுத்த கட்டமாக வங்கக் கடலில் புதிய புயன் சின்னம் நாளை உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 10ம் தேதி அந்தமான் அருகே உருவான காற்றழுத்தம் வலுப்பெற்று வட மேற்கு திசையில் நகர்ந்தது.

காற்றின் திசை மாறியதால் அந்த காற்றழுத்தம் மேலும் வலுப்பெற்று வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து சென்றது. அதனால் அது புயலாக மாறி மியான்மரில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தென் கிழக்கு திசையில் ஒரு காற்றழுத்தம் உருவாகி வட மேற்கு திசையில் நகர்ந்து சென்றது. இரண்டு காற்றழுத்தங்கள் எதிர் மறையான நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டதால் வடக்கு நோக்கி சென்ற புயல் தென் மேற்கு திசைக்கு இழுக்கப்பட்டது.

அப்போது இரண்டு காற்றழுத்தங்களும் ஒன்றாக இணைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டது.



அந்த கஜாதான் நேற்று முன்தினம் இரவு வரை தமிழகத்துக்குள் நுழைவதில் போக்கு காட்டியது. இறுதியாக நேற்று முன்தினம் நள்ளிரவில் கரையைக் கடந்தது. தற்போது அந்த புயல் தமிழகத்தின் உள் மாவட்டங்களை கடந்து கேரளப் பகுதிக்கு பயணித்துக் கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்தம் தற்போது உருவாகியுள்ளது. இது நாளை மேலும் வலுவடைந்து வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து வரும். 19ம் தேதி சென்னை அருகே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக 19ம் தேதி முதல் சென்னை மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கும்.



இந்த காற்றழுத்தம் வலுப்பெற்று புயலாக மாறாது. வெறும் மழை மட்டுமே பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தவிர கஜா புயல் கரைக் கடந்து சென்றுவிட்டதால், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லலாம் என்றும், தெற்கு பகுதிக்கு மட்டும் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News