Tuesday, November 6, 2018

விதிமுறையை மீறி பட்டாசு வெடித்தவர்களிடம் ரூ.1 கோடி வரை வசூல்!

டெல்லியில் காற்று மாசுக் கட்டுப்பாடுகளை மீறிய பொதுமக்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.



காற்று மாசு காரணமாக டெல்லியில் பட்டாசு வெடிக்க கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்த ஆண்டும் அதேபோல் பட்டாசுக்கு தடை விதிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் பட்டாசுகளை வெடிக்கலாம் என தீர்ப்பளித்தது. அதன்படி நாடு முழுவதுமே இரண்டு மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க வேண்டுமெனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என மாநில அரசு அறிவித்துள்ளது.



டெல்லியில் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 10ஆம் தேதி வரை காற்றின் மாசுபாடு குறித்து அளவீடு செய்ய வேண்டும் என மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மேலும் டெல்லி மக்கள் புகை அதிக வெளியாகும் வாகனங்களை பயன்படுத்த வேண்டாம் என்றும், பட்டாசுகளை வெடிக்காமல் தீபாவளி கொண்டாடுமாறும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. ஏனென்றால் தீபாவளி நேரத்தில் பனிப்பொழிவுடன் மாசுபாடு அதிகரித்தால், அங்கு ஏக்யூஐ அளவு 400ஐ தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் காற்றுமாசு அபாய அளவைத் தாண்டியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காற்றின் தரமும் மாசும் அதிகரித்து வருவதால் பலருக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.



டெல்லியில் உள்ள மந்திர் மார்க் பகுதியில் 707, மேஜர் தியான் சந்த் தேசிய மைதானம் பகுதியில் 676, ஜவஹர்லால் நேரு மைதானம் பகுதியில் 681 என்ற அளவில் காற்று மாசு குறியீட்டளவு பதிவாகியுள்ளது. இவை மிக மோசமான நிலையை குறிப்பதாகும். இதனிடையே டெல்லி அரசு Clean Air என்ற விழிப்புணர்வு பரப்புரை மூலம் காற்று மாசுக் கட்டுப்பாடுகளை மீறியவர்களை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இதனிடையே விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக கடந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News