தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பட்டாசு தான். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிப்பதிலும், மத்தாப்பு கொளுத்துவதிலும் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் இந்த ஆண்டு அந்த பட்டாசுகளை மகிழ்ச்சியுடன் வெடிப்பதற்கும் சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை விதித்து உள்ளது. குறிப்பிட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்து உள்ளது.
பட்டாசுகளில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்ப்பதற்காக மாசற்ற தீபாவளியை எல்லோரும் கொண்டாட வேண்டும் என்ற பிரசாரமும் பல்வேறு இயக்கங்கள் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி உறையூர் மெத்தடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று யுகா பெண்கள் அமைப்பின் சார்பில் வெடியில்லா தீபாவளி என்ற பெயரில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.