Wednesday, November 28, 2018

4ஆவது முறையாகத் தமிழகம் முதலிடம்!


உடலுறுப்பு தானத்தில் நாட்டிலேயே சிறந்த மாநிலத்துக்கான விருதைத் தமிழகம் தொடர்ந்து நான்காவது முறையாகப் பெற்றுள்ளது.



மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட 9ஆவது இந்திய உடலுறுப்பு தான தின நிகழ்வு இன்று (நவம்பர் 27) டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில், நாட்டிலேயே உடலுறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாகத் தமிழகம் தொடர்ந்து நான்காவது முறையாக முதலிடம் வகிப்பதற்கான விருது வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர்கள் அஸ்வின்குமார் சவுபே, அனுபிரியா பட்டேல் ஆகியோரிடம் இருந்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த விருதைப் பெற்றார்.



அப்போது, "தொடர்ந்து நான்காவது முறையாக இந்த விருதைப் பெறுவதில் பெருமையாக இருக்கிறது. தமிழகத்தில் உடலுறுப்புகளைத் தானமாக வழங்குவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. தானமாகப் பெற்ற உறுப்புகளைக் கொண்டு பல்வேறு உறுப்பு மாற்றுச் சிகிச்சைகள் தமிழகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. உடலுறுப்பு தானம் தொடர்பாகப் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டன. உடலுறுப்பு தானம் ஒரு பொது இயக்கமாகவே தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது" எனத் தமிழகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.



"உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு தமிழகத்தில் மட்டும்தான் அதிகபட்சமாக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதுவரை 1,198 கொடையாளர்களிடம் இருந்து 6,886 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளது" என்று விஜயபாஸ்கர் கூறினார்.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News