Sunday, November 11, 2018

7 பேர் விடுதலை விவகாரம்.. குடியரசுத் தலைவருக்கு தெரியப்படுத்தாமல் மத்திய அரசே நிராகரித்தது அம்பலம்..!






பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்ட பரிந்துரை கடிதத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் மத்திய உள்துறை அமைச்சகமே நிராகரித்தது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை முன்விடுதலை செய்யக்கோரி கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு பரிந்துரை கடிதம் அனுப்பியது.

அதனைத்தொடர்ந்து 2018 ஏப்ரல் 18-ஆம் தேதி குடியரசுத் தலைவரின் உத்தரவுப்படி என்று குறிப்பிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசின் பரிந்துரை கடிதத்திற்கு பதில் அனுப்பியது.

அதில், முன்னாள் பிரதமர் உள்ளிட்ட 15 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 7 பேரை விடுதலை செய்தால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்பதால், பரிந்துரை கடிதத்தை நிராகரிப்பதாக தெரிவித்தது.



இந்நிலையில் தண்டனைக் கைதிகளில் ஒருவரான பேரறிவாளன், எதன் அடிப்படையில் தமிழக அரசின் பரிந்துரை கடிதம் நிராகரிக்கப்பட்டது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குடியரசு தலைவர் மாளிகைக்கு கடிதம் அனுப்பினார். அதற்கு 7 பேரின் விடுதலை தொடர்பாக தங்களுக்கு பரிந்துரை கடிதம் எதுவும் வரவில்லை என்று குடியரசு தலைவர் மாளிகை பதில் அளித்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு அனுப்பிய பரிந்துரை கடிதம் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பப்படவில்லை என்றும், உயர்மட்ட அதிகாரியால் 7 பேரின் விடுதலை தொடர்பான பரிந்துரை கடிதம் நிராகரிக்கப்பட்டது என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News