Thursday, November 15, 2018

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இரண்டில் எதை பயன்படுத்துவது சிறந்தது?

தற்போது நம்மில் பலரும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இரண்டையும் பயன்படுத்துகிறோம். ஆனால் இரண்டு கார்டில் எதை அதிகம் பயன்படுத்துவது சிறந்தது?



இந்தக் கேள்வி அவ்வப்போது நமக்குள் எழும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு ஆகிய இரண்டுமே 16 இலக்க எண், காலாவதி தேதி மற்றும் பின் எண் கொண்டவைதான்.





நமது வங்கிக் கணக்கில் பணம் இருந்தால்தான், டெபிட் கார்டில் செலவு செய்ய முடியும். ஆனால் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்றாலும் கிரெடிட் கார்டை பயன்படுத்திச் செலவு செய்ய முடியும். பொதுவாக டெபிட் கார்டுகளை விட கிரெடிட் கார்டுகள் ஏன் சிறந்தவை என்பது குறித்துப் பார்க்கலாம்.

கிரெடிட் கார்டுகள் மூலம் ஷாப்பிங் செய்யும்போது 'கேஷ் பேக்', தள்ளுபடி போன்ற பலவிதமான சலுகைகள் கிடைக்கும். மேலும் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்யும் தொகையை சரியாகத் திருப்பிச் செலுத்தும்போது வெகுமதி புள்ளிகளும் கிட்டும். அதனைப் பயன்படுத்திப் பரிசுகள், சேவை முன்னேற்றம், புதுப்பித்தல் போன்றவற்றைப் பெற முடியும். டெபிட் கார்டில் எப்போதாவதுதான் இது போன்ற பலன்கள் கிடைக்கும்.

கிரெடிட் கார்டில் தவணை முறையில் பொருட்களை வாங்க முடியும், டெபிட் கார்டில் அப்படிச் செய்ய முடியாது. ஆனால் தவணை முறையில் கிரெடிட் கார்டை பயன்படுத்திப் பொருட்கள் வாங்கும்போது அதற்கு வட்டி செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.



டெபிட் கார்டு பரிவர்த்தனையில் மோசடி நடைபெற்றால், நம் வங்கிக் கணக்கில் உள்ள மொத்தப் பணத்தையும் இழக்க நேரிடும். ஆனால் கிரெடிட் கார்டில் அப்படிப்பட்ட அபாயம் இல்லை. நமக்குரிய வரம்பை மீறி பரிவர்த்தனை செய்ய முடியாது.

நாம் ஏதேனும் கடன் பெற விண்ணப்பிக்கும்போது வங்கிகள் நமது கிரெடிட் ஸ்கோர் எனப்படும் கடன் மதிப்பெண்ணை சோதிக்கும். கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்து அவற்றைச் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தி இருந்தால் கிரெடிட் ஸ்கோர் உயர்ந்து இருக்கும். எனவே எளிதாகக் கடன் பெற முடியும். டெபிட் கார்டு மட்டும் வைத்து இருக்கும்போது கிரெடிட் ஸ்கோரை உயர்த்த முடியாது. இதெல்லாம் ஒப்பீட்டு அளவில், டெபிட் கார்டை விட கிரெடிட் கார்டை முன்னே நிறுத்தும் விஷயங்கள்.

அதேநேரம், கிரெடிட் கார்டு தவணைத் தொகையை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியும் என்றால் மட்டும் கிரெடிட் கார்டு வாங்குவது நல்லது. சரியான நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால் தாமதமாகக் கட்டணத்தைச் செலுத்தியதற்கு அபராதமும் வட்டியும் சேர்த்து செலுத்த வேண்டும்.



கையில்தான் கார்டு இருக்கிறதே என்று, பார்த்த பொருட்களை எல்லாம் வாங்க விரும்புவோருக்கும் கிரெடிட் கார்டு சரி வராது. பாக்கெட்டில் பணம் இல்லாமலே செலவழிக்க முடிவது இன்று இனித்தால், நாளை நீளமான 'ஸ்டேட்மெண்ட்' வரும்போது கசக்கும். ஓர் ஆசையில் நம்மை மீறிச் செலவழித்துவிடுவோம் என்று எண்ணுபவர்களும், நிதி நிர்வாகத்தில் ஒழுங்கில்லாதவர்களும் கிரெடிட் கார்டை நாடாமல் இருப்பதே நல்லது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News