Tuesday, November 20, 2018

தமிழகத்தில் காற்றழுத்தத் தாழி வலுவடைய வாய்ப்பு!


வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழி வலுவடைய வாய்ப்புள்ளதால், தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் இன்றும் (நவ.20), நாளையும் (நவ. 21) மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் திங்கள்கிழமை கூறியது:



தென்கிழக்கு வங்கக்கடலில் ஞாயிற்றுக்கிழமை நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழி, திங்கள்கிழமை தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது. இது தொடர்ந்து, மேற்கு திசையில் நகர்ந்து, செவ்வாய்க்கிழமை(நவ.20) தமிழகம், புதுச்சேரியில் கடலோர பகுதியில் நிலை கொள்ளக்கூடும்.

இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில், குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கி, செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை(நவ.20, 21)ஆகிய நாள்களில் படிப்படியாக உள் மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கும்.

சென்னையில் மழை வாய்ப்பு: சென்னையில், அடுத்த 24 மணி நேரத்துக்குள் ஓரிரு முறை லேசான மழை பெய்யக்கூடும். செவ்வாய், புதன்கிழமைகளில் இடைவெளி விட்டு சில முறை மிதமான மழை பெய்யக்கூடும்.



தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுச்சேரியில் காரைக்காலில் ஓரிரு இடங்களில் பலத்தமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: தமிழக கடற்கரை மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை (நவ. 20,21) ஆகிய நாள்களில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

20 சதவீதம் மழை குறைவு: நிகழாண்டில் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரையான கால கட்டத்தில், ஹதமிழகத்தில் பதிவான மழை அளவு 240 மி.மீ., இந்தக் காலகட்டத்தில் எதிர்பார்க்கும் அளவு 300 மி.மீ. இது 20 சதவீதம் குறைவு. ஆனால் டிசம்பர் வரை மழை இருக்கிறது.

சென்னையைப் பொருத்தவரை மழை பதிவான அளவு 210 மி.மீ. இந்தக் காலகட்டத்தின் இயல்பு அளவு 530 மி.மீ. இது இயல்பைவிட 60 சதவீதம் குறைவு என்றார் எஸ்.பாலச்சந்திரன்.



குன்னூரில் 70 மி.மீ.: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் குன்னூரில் 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 60 மி.மீ.,
ஈரோடு மாவட்டம் பவானியில் 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. காஞ்சிபுரம், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News