உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சிறுவன் பட்டாசு வெடித்ததற்கு சிறுவனின் தந்தையை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்
காற்று மாசு காரணமாக டெல்லியில் பட்டாசு வெடிக்க கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்த ஆண்டும் அதேபோல் பட்டாசுக்கு தடை விதிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் பட்டாசுகளை வெடிக்கலாம் என தீர்ப்பளித்தது. அதன்படி நாடு முழுவதுமே இரண்டு மணி நேரம் தான் பட்டாசு வெடிக்க வேண்டுமெனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என மாநில அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 10ஆம் தேதி வரை காற்றின் மாசுபாடு குறித்து அளவீடு செய்ய வேண்டும் என மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மேலும் டெல்லி மக்கள் புகை அதிக வெளியாகும் வாகனங்களை பயன்படுத்த வேண்டாம் என்றும், பட்டாசுகளை வெடிக்காமல் தீபாவளி கொண்டாடுமாறும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. ஏனென்றால் தீபாவளி நேரத்தில் பனிப்பொழிவுடன் மாசுபாடு அதிகரித்தால், அங்கு ஏக்யூஐ அளவு 400ஐ தாண்டு என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி காசிபூர் பகுதியில் மகன் பட்டாசு வெடித்ததால் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நவம்பர் 1ம் தேதி சிறுவன் ஒருவர் நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக அதிக பட்டாசுகளை வெடித்துள்ளான். பட்டாசு வெடிக்கக்கூடாது என்று பக்கத்துவீட்டார்கள் எச்சரிகை விடுத்தும் சிறுவன் அவர்களை கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து அவர்கள் காவல்துறைக்கு புகார் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் தந்தையை கைது செய்து எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். அவருக்கு அதிகபட்ட அபராதம் அல்லது 6 மாத சிறை கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரத்தின் படி 2016ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் 16,000 பேர் காற்று மாசினால் உயிரிழந்துள்ளனர்.
No comments:
Post a Comment