Monday, November 19, 2018

ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்போம்: அரசுப் பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு

கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் பங்கேற்கும் என அதன் மாநிலத் தலைவர் உ.மா.செல்வராஜ் அறிவித்தார்.

கடலூரில் அந்தச் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டச் செயலர் ஆ.செல்வநாதன் தலைமை வகித்தார்.



மாநிலத் தலைவர் உ.மா.செல்வராஜ், மாநில பொதுச் செயலர் க.அறவாழி, மாநில பிரசார செயலர் என்.சுந்தர்ராஜா, ஜாஸ்மின் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.ஆர்.சிங்காரம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய மேல்நிலை அலுவலர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் ஆர்.ராம்குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.



கூட்டத்துக்குப் பிறகு உ.மா.செல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறிதாவது:
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 7-ஆவது ஊதியக் குழு அறிக்கையில் அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், ஆய்வக உதவியாளர்கள், களப் பணியாளர்கள், அமைச்சுப் பணியாளர்களின் ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு வருகிற டிச.4-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்தக் கூட்டமைப்புடன் அரசுப் பணியாளர் சங்கம் இணைந்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கிறது.



இதையொட்டி, சங்கம் சார்பில் வருகிற 25-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடைபெறும். நவ.25 முதல் 30-ஆம் தேதி வரை அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சியும், 30-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டமும் நடைபெற உள்ளது என்றார் அவர். முன்னதாக, மாவட்ட அமைப்புச் செயலர் ஜி.ராஜமோகன் வரவேற்றார்.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News