Friday, November 23, 2018

பாடப் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்குப் புதிய புத்தகங்கள்



மாணவிகளுக்குப் பாடப்புத்தகங்கள் வழங்குகிறார் அமைச்சர் செங்கோட்டையன்.



தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடில் கஜா புயலால் பாடப் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்குப் புதிய புத்தகங்களை வியாழக்கிழமை வழங்கினார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்.
ஒரத்தநாடு அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளுக்குப் பாடப் புத்தகங்களை வழங்கிய அவர் கூறியதாவது:

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக புயலால் பாடப் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்குப் புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது.



மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 692 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளில் சுமார் 500 மாணவ மாணவிகளின் பாடப்புத்தகங்கள் புயலில் இழந்தது கண்டறியப்பட்டது. இவர்களுக்குத் தற்போது புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், புதிய பாடப்புத்தகங்கள் தேவைப்படும் மாணவ மாணவிகளுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல, கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பாடப் புத்தகங்களை இழந்த மாணவ, மாணவிகளுக்குப் புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலம் கூடுதல் பாடப்புத்தகங்கள் பெறப்பட்டுள்ளன.




தஞ்சாவூர் மாவட்டத்துக்கு 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை 40,850 பாடப் புத்தகங்களும், நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு 78,800 பாடப்புத்தகங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. எனவே மாணவர்கள் தொய்வின்றி கல்வி பயில பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றார் செங்கோட்டையன்.


இதைத்தொடர்ந்து வாண்டையார் இருப்பு, ராகவாம்பாள்புரம், நார்தேவன் குடிகாடு, மூர்த்தியம்பாள்புரம், நெய்வாசல் உள்ளிட்ட அரசுப் பள்ளிகளில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது, வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம், மக்களவை உறுப்பினர் கு. பரசுராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News