Wednesday, November 14, 2018

நீட் பயிற்சி வகுப்புகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தால் உரிய நடவடிக்கை : செங்கோட்டையன்

தனியார் நிறுவனங்கள் நடத்தும் நீட் பயிற்சி வகுப்புகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாகபுகார் வந்தால் அந்த நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.





சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள எம்.சி.சி பள்ளியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் குழந்தைகள் தின விழா மற்றும் டாக்டர். எஸ்.ஆர் அரங்கநாதன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில்,பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகுமார், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.





முன்னதாக, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜெயகுமார், "மாணவர்கள் கல்வியிலும், வீரத்திலும் தங்களை சிறந்தவர்களாக உருவாக்கிக்கொள்ள வேண்டும். வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த திட்டங்களை வகுத்து வழங்கி வருகிறது" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது.எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின்விருப்பங்கள் கல்வி முன்னேற்றத்தின் மூலம் மட்டுமே சாத்தியம். அடுத்த கல்வியாண்டில்1- 5ம் வகுப்பு வரையும் 6-8 ம் வகுப்பு வரையும் உள்ள மாணவர்களுக்கானசீருடை மாற்றம் செய்யப்படும்.இலவச மிதிவண்டிகள் வரும் டிசம்பர் மாதம் கொடுக்கப்படும். இலவச மடிக்கணினிகள் கொடுக்கும் பணி வரும் ஜனவரி மாதம் இறுதிக்குள் முடிவுபெறும். அரசு ஏற்படுத்தித்தரும் வாய்ப்புகளை பயன்படுத்தி மாணவர்கள் சிறந்த முறையில் முன்னேறுவதுடன்,அதன் மூலம் நாட்டிற்கும் சேவையாற்ற வேண்டும்" எனதெரிவித்தார்.





இதனை தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினார். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களில் அதிக உறுப்பினர்களை சேர்த்த நூலக ஊழியர்களுக்கு டாக்டர். எஸ்.ஆர் அரங்கநாதன் விருதுகளை அமைச்சர்கள் வழங்கி சிறப்பித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "தனியார் நிறுவனங்கள் நடத்தி வரும் நீட் பயிற்சி வகுப்புகளை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.அவர்கள் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து பெற்றோர் அல்லது மாணவர்கள் மூலம் புகார் வந்தால் அந்த நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறினார்.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News