Thursday, November 22, 2018

மாணவர்களை மேம்படுத்துவதில் ஆசிரியர் பங்கு முக்கியமானது: துணைவேந்தர் பேச்சு



சிறந்த சேவகர் விருது பெற்ற கூடுவாஞ்சேரி பள்ளி நாட்டு நலத்திட்டப்பணி ஆசிரியர் பி.தயாளனுக்கு சான்றிதழ் வழங்குகிறார் துணை வேந்தர் சாகுல் ஹமீது பின் அபுபக்கர்.



மாணவர்களின் தனித்திறன்,அறிவாற்றலைக் கண்டறிந்து ஊக்குவிப்பதில் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய பங்கு உள்ளதாக பி.எஸ்.அப்துர்ரகுமான் கிரசென்ட் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத் துணைவேந்தர் சாகுல் ஹமீது பின் அபுபக்கர் கூறினார்.

இக்கல்வி நிறுவனத்தில் பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. 



இதில் அபுபக்கர் பேசியது:-

நல்ல ஆசிரியர்களின் வழிகாட்டுதல் கிடைக்கப்பெற்ற மாணவர்கள் ஏதேனும் ஒரு துறையில் சிறந்து விளங்கும் தகுதி, திறமைகளை பெற்று விடுகின்றனர். பாடம் போதிப்பது மட்டுமல்லாமல், மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொடுப்பதிலும் ஆசிரியர்களுக்குப் பெரும் பங்கு உள்ளது.
மாணவர்கள் மனதில் ஆசிரியர்கள் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, செயலாற்றல் திறன் ஆகிய நற்பண்புகளை விதைத்து, அவர்களுக்கு வழிகாட்டி ஊக்குவிக்க வேண்டும் என்றார் சாகுல் ஹமீது பின் அபுபக்கர்.
இதையடுத்து கடலூர் சார்பு நீதிபதி என்.சுந்தரம் பேசியது:



அனைத்து வகையான பிரச்னைகளுக்கும் இலவச சட்ட உதவி மையத்தில் உரிய நிவாரணம் பெறலாம் என்ற விழிப்புணர்வை கடலூர் மாவட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் உருவாக்கி உள்ளோம்.

சில அரசுப் பள்ளிகளில் சட்ட சேவை மையங்கள் உருவாக்கி மாணவ, மாணவியருக்கு சட்டப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளோம்.
இதன் மூலம் பள்ளி மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை,பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறன் அதிகரித்துள்ளது.

பேரிடர் இழப்பு,வறட்சி பாதிப்பு ஆகிய பிரச்னைகளுக்கும் இலவச சட்ட உதவி மையம் மூலம் உரிய நிவாரணம் பெற முடியும் என்பதை பள்ளி மாணவர்கள் அறிந்து வைத்துள்ளனர் என்றார். நாட்டு நலப்பணித் திட்ட மண்டல இயக்குநர் சி.சாமுவேல் செல்லையா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த 597 பள்ளிகளைச் சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News