Friday, November 30, 2018

கஜா புயலால் பாதித்த பகுதிகளில் கல்லூரி கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை: உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்



சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்.



கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாணவர்களின் கல்விக் கட்டணத்தைக் குறைப்பதற்காக தனியார் கல்லூரி நிர்வாகங்களிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

சேலம் விமான நிலையத்தில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
கஜா புயல் நிவாரணப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அங்கு பொதுமக்களின் குடிநீர்த் தேவைக்காக ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் 1216 இடங்களில் 20 அடி ஆழத்தில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 3000 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க முன்னனுமதி வழங்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாணவர்களின் நலன் கருதி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. 



புயல் பாதித்துள்ள பகுதிகளைச் சேர்ந்த அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மிகக் குறைந்த கட்டணம். ஏற்கெனவே கட்டணம் செலுத்திவிட்டனர். தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கட்டணங்களைக் குறைப்பது குறித்து தனியார் கல்லூரி நிறுவனங்களுடன் பேசி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

துணைவேந்தர் பதவி காலியாகும் பல்கலைக்கழகங்களில் உடனடியாக துணைவேந்தரை நியமிக்க முன்கூட்டியே ஆய்வுக் கமிட்டி அமைக்கப்படும். அதன் மூலம் உடனடியாக துணைவேந்தர் பணியிடங்கள் நிரப்பப்படும். சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் தேர்வாணையர் பணியிடம் விரைவில் நிரப்பப்படும். மேலும், இதேபோன்று மற்ற இடங்களில் காலியாக உள்ள பதிவாளர், தேர்வாணையர் மற்றும் இதர பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். பலகலைக்கழகங்களில் போலி சான்றுகள் மூலம் பணியாற்றுவோர் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. போலி சான்றுகள் கொடுத்தது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News