Wednesday, November 14, 2018

கர்ப்ப கால சர்க்கரை நோய் ஏன் ஏற்படுகிறது... தீர்வு என்ன? - ஒரு மருத்துவ அலசல்!

சக்கரை நோயாளி சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து ரத்தத்தில் சர்க்கரை அளவு 160 மில்லிகிராமைத் தாண்டினால் அவருக்குச் சர்க்கரை நோய் பாதித்திருக்கிறது என்று பொருள். அளவு 140 மில்லி கிராமாக இருந்தாலே சர்க்கரை நோய் இருக்கலாம்.





ஒருகாலத்தில் ஊருக்கு ஒரு சர்க்கரை நோயாளி இருந்தால் பெரிது. இன்று தெருவுக்கு பத்துப் பேருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. அந்த அளவுக்கு அது பொதுநோயாக மாறியிருக்கிறது. சாதாரணமாக, சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து ரத்தத்தில் சர்க்கரை அளவு 160 மில்லிகிராமைத் தாண்டாமல் இருக்க வேண்டும். அதைத் தாண்டினால் அவருக்குச் சர்க்கரை நோய் பாதித்திருக்கிறது என்று பொருள். கர்ப்பிணிகளைப் பொறுத்தவரை, சர்க்கரை அளவு 140 மில்லி கிராமாக இருந்தாலே சர்க்கரை நோய் இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். இதற்குப் பெயர், கர்ப்பகால சர்க்கரைநோய். கர்ப்பமாக இருக்கும் ஒன்பது மாதத்துக்குள் மூன்று முதல் நான்கு தடவையாவது சர்க்கரை நோய்க்கான பரிசோதனைகளை எடுக்கச் சொல்வார்கள். இதில் `குளூக்கோஸ் சேலஞ்ச் டெஸ்ட்' (Glucose Challenge Test) என்ற பிரத்தியேகப் பரிசோதனையும் செய்தாக வேண்டும்.





கர்ப்பிணிகளுக்கு ஏன் இத்தனை பரிசோதனைகள்... காசு பறிக்கும் முயற்சியா. இந்தக் கேள்விக்கு விடைதேடும் முன்பு, சர்க்கரைநோய் மற்றும் அதன் வகைகளைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

சர்க்கரை நோயை, டைப் 1, டைப் 2 என இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள். இதில் `டைப் 1 டயாபடிஸ்' என்ற முதல் வகையானது, சிறு வயதில் மரபணுக்கள் மூலம் வரும் பரம்பரைநோய் வகையைச் சார்ந்தது. இது உடலில் இன்சுலின் என்ற சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் உற்பத்தியின்மையால் ஏற்படக்கூடியது. ஆனால், அதிக உடல்பருமன் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களால் ஏற்படும் `டைப் 2 டயாபடிஸ்' என்ற இரண்டாம்வகை சர்க்கரை நோய் வந்தால், உற்பத்தியாகும் இன்சுலினை உடலில் உள்ள செல்கள் பயன்படுத்த முடியாமல் போய்விடும்.

உலக அளவில் டைப் 1, டைப் 2 ஆகிய இந்த இரண்டுவகையான சர்க்கரை நோய்களும், ஏறத்தாழ 42 கோடி பேருக்கும்மேல் இருக்கிறது என்றாலும், தங்களுக்கு சர்க்கரைநோய் இருப்பது தெரியாமல் வாழ்வோரின் எண்ணிக்கை 20 கோடிக்கும் மேல் இருக்கும் என்கிறது புள்ளிவிவரம். இந்த இரண்டு வகையான நோய்களிலும், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தாவிட்டால் மாரடைப்பு, பக்கவாதம், ரத்தக்குழாய் அடைப்பு, சிறுநீரகச் செயலிழப்பு, பார்வையிழப்பு, நரம்புத் தளர்ச்சி, `கேங்க்ரீன்' என உடலின் அனைத்து உறுப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.





உலகெங்கும் எட்டு விநாடிக்கு ஒரு மரணம், முப்பது விநாடிக்கு ஒரு கால் இழப்பு, ஐந்து நிமிடத்துக்கு ஒரு மாரடைப்பு என அமைதியாகக் கொன்று குவிப்பதால் சர்க்கரை நோயை `சைலன்ட் கில்லர்' என்றே மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது. ஆனாலும், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் தகுந்த சிகிச்சை மூலம் 80 சதவிகிதத்தினரின் டைப்-2 சர்க்கரை நோயை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என்பதுதான் இதில் நிம்மதியளிக்கும் விஷயம்.

இந்தப் பாதிப்புகள் ஒருபுறமிருக்க, இன்சுலின், மாத்திரைகள், தொடர் பரிசோதனைகள் என்று பொருளாதாரரீதியாக ஒவ்வொரு குடும்பத்தின் பட்ஜெட்டிலும் பெரிதாக கைவைக்கும் இந்த சர்க்கரைநோய், உலகின் 15 சதவிகிதம் பொருளாதாரத்தையும் உறிஞ்சியெடுக்கிறது என்ற அதிர்ச்சித் தகவலைத் தருகிறது உலக நீரிழிவு மையம் (World Diabetes Association). ஆக, சர்க்கரைநோய் உள்ள குடும்பங்களில் ஒவ்வொருவருக்கும் தொடக்க நிலையிலேயே நோயைக் கண்டறிந்து, தகுந்த சிகிச்சை அளிக்கும்போது, சர்க்கரை நோயின் பக்கவிளைவுகளை அறவே தவிர்க்கமுடியும். அத்துடன் அதன்மூலம் ஒரு சமுதாயத்தின், ஒரு நாட்டின் வளர்ச்சியையே அதிகரிக்க முடியும் என்பதால், சர்க்கரைநோய் பற்றி விழிப்புஉணர்வை ஏற்படுத்தும்விதமாக, இன்றைய (நவம்பர் 14) #உலக சர்க்கரைநோய் தினத்தை, `குடும்பமும், சர்க்கரை நோயும்..!' (The Family and Diabetes) என்ற தலைப்புடன் அனுசரிக்கிறது உலக நீரிழிவு மையம்.



அதெல்லாம் சரி... இப்படியெல்லாம் செலவைக் குறைக்கச் சொல்லிவிட்டு கர்ப்பிணிகளுக்கு மட்டும், சர்க்கரை நோய்க்கான அளவைக் குறைத்து, அவர்கள் செய்ய வேண்டிய டெஸ்ட்டுகளையும் அதிகம் செய்தால் எப்படி நோயும், செலவும் கட்டுக்குள் இருக்கும்? இதற்குப் பதிலளிக்கும் விதமாக, `ஒரு மரத்தின் வேரில் புழு விழுந்திருக்கும் நிலையில், வேரின் நோயைச் சரி செய்யாமல் கிளைகளின் நோயைக் குணப்படுத்துவதால் என்ன பயன்..?' என்று கேட்கிறார்கள், மகப்பேறு மற்றும் சர்க்கரைநோய் சிறப்பு மருத்துவர்கள். இப்போதுதான், `கர்ப்பகாலச் சர்க்கரை நோய்' என்ற வாக்கியம் புதிதாக நமக்கு அறிமுகமாகிறது. நமக்கு ஏற்கெனவே பரிச்சயமான டைப் 1 மற்றும் டைப் 2 என்ற இரண்டுவகை சர்க்கரை நோய்களைத் தவிர, கர்ப்பகாலத்தில் தோன்றும் நோய்தான் இது.

தொடக்கக் காலங்களில் சர்க்கரை நோயை, ஓர் உயிர்க்கொல்லி நோயாகவே பார்த்தது மருத்துவ உலகம். சர்க்கரை நோயுடன் காணப்பட்ட பெண்கள் பதின்பருவத்தைத் தாண்டுவதே அரிதாக இருந்த அந்த நாள்களில், `சர்க்கரை நோயுடன் இருக்கும் யாரும் கர்ப்பம் தரிக்கவே முடியாது' (True Diabetes is inconsistent with conception) என்று, ப்ளாட் என்ற பிரெஞ்சு மருத்துவரும், வேறு சில மருத்துவர்களும் வலியுறுத்திச் சொல்லியிருந்தார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு, சர் ஃப்ரெட்ரிக் பான்டிங் என்ற கனடாவைச் சேர்ந்த மருத்துவர், `இன்சுலின்' என்ற மருந்தைக் கண்டுபிடித்தபிறகுதான், சர்க்கரை நோயுடன் காணப்பட்ட பெண்கள் கருத்தரிப்பதும், தாய் சேய் இழப்புகளும் கட்டுக்குள் வரத் தொடங்கின.





`இன்சுலின்' கண்டறியப்பட்ட சிறிது காலத்துக்குப் பிறகு, பெர்லின் பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில், பென்னிவிட்ஸ் என்ற மருத்துவர், `ஏற்ககெனவே சர்க்கரைநோய் இல்லாத பெண்களுக்கும் கர்ப்ப காலத்தில் சர்க்கரைநோய் ஏற்படலாம்' என்று கண்டுபிடித்தார். அதை அப்போது கர்ப்பகால சர்க்கரைநோய் (Gestational Diabetes) என்று அழைத்திருக்கிறார்கள். உலக அளவில் ஏழு பெண்களில் ஒருவருக்கு ஏற்படும் இந்தக் கர்ப்ப கால சர்க்கரைநோய், நமதுநாட்டில் அதைவிடச் சற்றே அதிகமாகக் காணப்படுகிறது என்கின்றன 

புள்ளிவிவரங்கள்.

கர்ப்ப காலத்தில் அதிகம் சுரக்கும் ஹார்மோன்களான புரொஜெஸ்ட்ரான், ஈஸ்ட்ரோஜென், நஞ்சுக்கொடி ஹார்மோன் என அழைக்கப்படும் `ஹியூமன் பிளேசென்டால் லாக்டோஜென்' (Human Placental Lactogen) ஆகியவை அனைத்தும் இன்சுலினுக்கு எதிராக வேலைசெய்யும் தன்மை உடையவை என்பதால், அதை ஈடுகட்ட இயல்பாகவே கர்ப்பிணிகளின் உடலில் இன்சுலின் சற்று அதிகமாக உற்பத்தியாகத் தொடங்கும். ஆனால் கர்ப்பிணிகளில் ஒருசிலருக்கு, அதிலும் குறிப்பாக அதிக உடல்பருமன், குடும்பத்தில் ஏற்கெனவே சர்க்கரை நோயுள்ளவர்கள், பிசிஓடி (PCOD) பிரச்னை உள்ளவர்களுக்கு தேவையான அளவு இன்சுலின் சுரக்காததால், அவர்களுக்கு இந்த கர்ப்பகாலத்தில் மட்டும் சர்க்கரைநோய் வருகிறது. இதையே `கர்ப்பகால சர்க்கரைநோய்' என்று மருத்துவ உலகம் அழைக்கிறது.



இன்சுலின் குறைபாட்டால், தாயின் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அது தொப்புள் கொடி வழியாக நேரடியாகக் குழந்தையைச் சென்றடைந்து கருச்சிதைவு, பிறவி ஊனம், இதயம், சிறுநீரகம் மற்றும் உறுப்புகளில் பிறவி நோய், குறைப் பிரசவம், நிறைமாத சிசு இறப்பு, அதிக எடையுள்ள குழந்தை பிறப்பு, அதிகரிக்கும் சிசேரியன் பிரசவங்கள் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும். ஆனாலும், இவற்றையெல்லாம் தாண்டி மற்றுமொரு நேரடியான பாதிப்பையும் கருவிலிருக்கும் குழந்தைக்கு இந்த கர்ப்பகால சர்க்கரைநோய் ஏற்படுத்துகிறது.





தாயின் ரத்தத்தில் இருக்கும் இந்த அதிகளவு சர்க்கரை, குழந்தையின் கணையத்தை இயக்கத் தூண்டும். இதனால் கர்ப்ப காலத்திலேயே குழந்தைக்கு இன்சுலினைச் சுரக்கச் செய்து, குழந்தையின் சர்க்கரை அளவை மாற்றி மாற்றி, ஏற்றி இறக்கச் செய்கிறது. இவ்வாறு மாறிமாறிச் சுரக்கும் குழந்தையின் இன்சுலின், குழந்தையின் வளர்ச்சியைக் கருவிலேயே கட்டுப்படுத்துவதுடன் பிறக்கும் குழந்தைக்கு சர்க்கரைநோய் வருவதற்கான வாய்ப்புகளையும் அதிகப்படுத்துகிறது. மேலும், தந்தைக்குச் சர்க்கரை இருந்தால் குழந்தைக்கு 17ல் ஒரு பங்கும், தாய்க்கு இருந்தால் 25ல் ஒரு பங்கும், இருவருக்கும் இருந்தால் 10-ல் ஒரு பங்கும், டைப் 1 டயாபடிஸ் என்ற சிறு வயது சர்க்கரைநோய் வர வாய்ப்புள்ளது. ஆனால், கர்ப்பகால சர்க்கரைநோய் உள்ள தாய்க்குப் பிறக்கும் குழந்தைக்கு இந்த வாய்ப்புகள் அப்படியே இருமடங்காக அதிகரிக்கிறது என்றும், அதனால் அந்தக் குழந்தைகள் 12 - 13 வயதிலேயே சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் பல்வேறு ஆய்வுகள் தெரியவந்தன. இதைத் தடுக்கும்விதமாக கர்ப்பகாலத்தில் ரத்தத்தின் சர்க்கரை அளவு 140 மில்லிகிராமுக்கும் கீழேதான் நார்மல் என்கிறது உலக நீரிழிவு மையம். அதையும் மூன்று அல்லது நான்குமுறை பரிசோதனை செய்யவும் வலியுறுத்துகிறது.

கர்ப்ப காலத்தில் ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கண்டறிய, அமெரிக்க நீரிழிவு நோய் அமைப்பு, உலக சுகாதார அமைப்பு மற்றும் உலக நீரிழிவுநோய் ஆய்வு அமைப்பு (IADPSG) என ஒவ்வொன்றும் பல்வேறு வழிகளைக் கூறியுள்ளபோதும், இந்திய நீரிழிவு நோய் ஆய்வு அமைப்பின் (DIPSI) வழிமுறை மிக மிக எளிதானது. GCT என்ற இந்த குளுக்கோஸ் பரிசோதனையில், ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணும், 75 கிராம் குளுக்கோஸை நீரிலிட்டுக் குடித்த, இரண்டு மணிநேரம் கழித்து, ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தப் பிரத்தியேக சர்க்கரை அளவு பரிசோதனை, கர்ப்பம் உறுதி செய்ததும் நான்காவது மற்றும் எட்டாவது மாதங்களில் 3-4 முறையேனும் மேற்கொள்ளப்படுகிறது. கர்ப்ப காலத்தில் ரத்தத்தின் சர்க்கரை அளவு 140 மில்லிகிராமுக்கும் மேலாக இருக்கும்பட்சத்தில், `ஃபாஸ்டிங்' (Fasting), உணவுக்குப் பின் (Postprandial), ஹெச்பி.ஏ 1.சி (HbA1c) என அடுத்த நிலை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.



இந்தப் பரிசோதனைகளில் சர்க்கரைநோய்உறுதி செய்யப்பட்டால், இவர்களுக்கு மருத்துவ ஊட்டச்சத்து சிகிச்சை (Medical Nutrition Therapy) என்ற உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, தேவைப்படும்போது இன்சுலின் அல்லது மருந்துகள் ஆகிய சிகிச்சைமுறைகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. தொடக்கத்தில் தாத்தா, பாட்டி போல வயதானவர்களுக்கு மட்டுமே வந்த சர்க்கரைநோய், அதன் பிறகு அப்பா, அம்மாவுக்கு வரத் தொடங்கியது. வாழ்க்கைமுறை மாற்றம் காரணமாக, இன்றைக்கு 30, 40 வயதுகளிலேயே வர ஆரம்பித்துவிட்டது. இதே சர்க்கரைநோய், இனிவரும் காலங்களில் நமக்குப் பிறக்கும் குழந்தைக்கும் வந்துவிடாமல் தடுக்கவே, இந்தச் சிகிச்சை கர்ப்பகாலத்திலேயே தொடங்கப்படுகிறது. அதாவது வேரிலிருந்து தொடங்கப்படும் சிகிச்சை, குடும்பம் என்ற மரத்தை முழுவதுமாக பாதுகாக்கும். ஆம்... இனிக்கும் சர்க்கரை, வாழ்க்கையைக் கசப்பாக மாற்றாமல் இருக்க, இதில் மருத்துவர்கள் பெரும் அக்கறை காட்டுகிறார்கள். இந்த அக்கறையால், நமது அடுத்த தலைமுறை ஆரோக்கியம் பெறும் என்பது உறுதி. நமது அடுத்த தலைமுறையின் ஆரோக்கியமே, உண்மையில் நமது சமுதாயத்தின் ஆரோக்கியமாகும்..!
சர்க்கரை நோயின்றி அமையட்டும் உலகு..!




நன்றி: விகடன்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News