Tuesday, November 20, 2018

திடீர் மாற்றம்; வட தமிழகத்தை நோக்கி வேகமாக நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்,புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை, மாறாக வேகமாக நகர்ந்து நாளை காலை நாகை மாவட்ட தென் கடலோரப்பகுதியில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஆசிரியர் ந.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து ந.செல்வகுமார் தனது கூறியுள்ளதாவது:

வங்ககடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, பாக் ஜலசந்திக்கு மேல் கிழக்கே சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் அதிகாலை 4:00 மணி நிலவரப்படி நிலை கொண்டு இருந்தது. இது வேகமாக தீவிரமடைந்து வடமேற்காக நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயல் என்ற அளவில் உருவாக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டது.



இந்தநிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் போக்கில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது வேகமாக நகர்ந்து, நாகை மாவட்டத்தின் தென் கடலோரா பகுதியில் நாளை காலையே கரையை கடக்க வாய்ப்புள்ளது. கரையை கடந்ததும் வலுவிழந்து வட தமிழகப்பகுதி முழுவதும் பரவி மழையை கொடுக்கும்.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வட தமிழகத்தில் கனமழை பெய்யும். தெற்கு ஆந்திரா, தெற்கு கர்நாடக பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.



விழுப்புரம் கடலோரப்பகுதி, நாகை வடக்கு கடலோரம், கடலூர் தெற்கு கடலோரம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனினும் அச்சப்படும் அளவுக்கு மிகமோசமான மழையோ, காற்றோ இருக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். - Source தி இந்து



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News