Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, December 6, 2018

போலிச் சான்றிதழ் மூலம் அரசுக் கல்லூரி பேராசிரியர் பணி: 20 பேர் பிடிபட்டனர்

அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் போலிச் சான்றிதழ்கள் கொடுத்து பேராசிரியர் பணியில் சேர்ந்திருப்பதாக இதுவரை 20 பேர் வரை பிடிபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.



இவ்வாறு போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்களை, நிரந்தரப்பணி நீக்கம் செய்யவேண்டும். ஆனால், அதுபோன்ற நடவடிக்கைகளை கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் எடுப்பதில்லை என பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

போலி பிஎச்.டி. பட்டச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த பொன்னேரி அரசுக் கல்லூரி பேராசிரியர் மகாலிங்கம் (40) அண்மையில் பிடிபட்டார். இதுதொடர்பான புகாரின் அடிப்படையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், இதுபோல இன்னும் 50-க்கும் மேற்பட்டோர் போலி பிஎச்.டி. மற்றும் பணி அனுபவச் சான்றிழ் சமர்ப்பித்து பணியில் இருப்பதாகவும், அவர் மீது எந்தவித நடவடிக்கையும எடுக்கப்படவில்லை எனவும் பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.



இதுகுறித்து தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத் தலைவர் வீரமணி மற்றும் பொதுச் செயலாளர் தாமோதரன் ஆகியோர் கூறியது:

போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக இதுவரை பொன்னேரி பேராசிரியர் உள்பட 5 பேர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், உதகை, நாமக்கல், திருப்பூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கல்லூரிகளில் இன்னும் 50-க்கும் மேற்பட்டோர் இதுபோல போலிச் சான்றிதழ்கள் சமர்ப்பித்து பணியில் உள்ளனர்.

உதகை அரசு கல்லூரியில் மட்டும் 4 பேர் இப்போதும் பணியாற்றி வருகின்றனர். சென்னை மாநிலக் கல்லூரியில் இரண்டு பெண் பேராசிரியர்கள் போலியான பணி அனுபவச் சான்றிதழையும், பட்டச் சான்றிதழையும் சமர்ப்பித்து பணியில் உள்ளனர். இந்தப் பட்டியலை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்திருக்கிறோம். ஆனால், ஒரு சிலர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துவிட்டு, கிடப்பில் போட்டுவிட்டனர் என்றனர்.



இதுவரை 20 பேர் கண்டுபிடிப்பு: இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலக அதிகாரிகள் அளித்த தகவல்:-

போலிச் சான்றிதழ் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, வேறு மாநில பல்கலைக்கழங்களில் பிஎச்.டி. உள்ளிட்ட பட்டங்களைப் பெற்று அரசுக் கல்லூரிகளில் பேராசிரியர் பணியில் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 20 பேராசிரியர்கள் சந்தேகத்துக்கு இடமான வகையில் வேறு மாநில பல்கலைக்கழகங்களில் போலியாக பெற்ற பிஎச்.டி. சான்றிதழைக் கொடுத்து பணிக்குச் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 



இதில் உதகை அரசு கல்லூரியைச் சேர்ந்த 2 பேராசிரியர்கள், சேலம், திருப்பூர், நாமக்கல், பொன்னேரி அரசு கல்லூரிகளில் தலா ஒரு பேராசிரியர் என 5 பேர் மீது தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 5 பேராசிரியர்களின் விவரங்கள் நடவடிக்கைக்காக அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
மற்றவர்களின் சான்றிதழ் உண்மைத் தன்மைக்கானச் சான்று இன்னும் சம்பந்தப்பட்ட வெளி மாநில பல்கலைக்கழகங்களிடமிருந்து கிடைக்கப்பெறவில்லை. அந்தத் தகவல் வந்தவுடன், அதனடிப்படையில் மீதமுள்ளவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். 

நிரந்தர பணிநீக்கம் செய்யப் பரிந்துரை: இவ்வாறு போலிச் சான்றிதழ் கொடுத்து பணிக்குச் சேருபவர்களை நிரந்தரப் பணி நீக்கம் செய்யவேண்டும் என்றுதான் இயக்குநர் அலுவலகம் சார்பில் அரசுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. மீதமுள்ளவர்கள் மீதும் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டதும், அவர்களையும் நிரந்தர பணி நீக்கம் செய்ய அரசுக்கு பரிந்துரைக்கப்படும்.
ஆனால், இவர்கள் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துவிட்டதால் அவர்களையும் அரசு ஊழியர்களாகவே கருத வேண்டும் என உயர் அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். எனவே, அவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை மட்டுமே எடுக்க முடிகிறது.



அதுமட்டுமின்றி, இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்களும் உள்ளன. இயக்குநர் அலுவலகம் சார்பில் அளிக்கப்படும் இதுதொடர்பான புகார்கள் மீது காவல்துறை உரிய உடனடி நடவடிக்கை எடுப்பதில்லை. மேலும், சான்றிதழ் உண்மைத் தன்மைக்கான அத்தாட்சிக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் வெளிமாநில பல்கலைக்கழகங்கள் காலம் தாழ்த்துகின்றன என்றனர்.

இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநர் ஆர்.சாருமதி கூறியதாவது:
போலிச் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக இயக்குநர் அலுவலகம் உரிய வெளிப்படையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுவரை பொன்னேரி அரசுக் கல்லூரி பேராசிரியர் உள்பட 5-க்கும் மேற்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளித்தால் இயக்குநர் அலுவலகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.



தமிழ்க்கடல் WHATSAPP - இல் இணைய  கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News