பாடநுால் கழக மேலாண் இயக்குனர் ஜெகநாதன், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.பள்ளி கல்வி அமைச்சராக செங்கோட்டையன், 2017 பிப்ரவரியில் பொறுப்பேற்றார். இதையடுத்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதயசந்திரன், பள்ளி கல்வி செயலரானார். அப்போது, தொல்லியல் துறையில் பணியாற்றிய ஜெகநாதன், பாடநுால் கழக மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
அந்த நேரத்தில், டி.ஆர்.பி.,யில், சரியான தலைமை இல்லாமல், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. எனவே, டி.ஆர்.பி.,தலைவர் பதவியும், கூடுதல் பொறுப்பாக இவருக்கு வழங்கப்பட்டது. இவர் பொறுப்பேற்றதும், டி.என்.பி.எஸ்.சி.,யை போல, டி.ஆர்.பி.,க்கு, வருடாந்திர தேர்வு திட்டமிடல் அறிக்கை வெளியிட்டார்.பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வுகளில், சில ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதை கண்டுபிடித்து, கிரிமினல் நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். உடன், அவரிடமிருந்து, டி.ஆர்.பி., தலைவர் பொறுப்பு பறிக்கப்பட்டது. அந்த இடத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஜெயந்தி நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, பாடநுால் கழக பணிகளை மட்டும் கவனித்த ஜெகநாதன், புத்தகம் அச்சிடுவது, மாணவர்களுக்கான இலவச பொருட்களை கொள்முதல் செய்வதில், வெளிப்படை தன்மையை ஏற்படுத்தினார். செப்., 29ல் அரசு பிறப்பித்த உத்தரவில், பாடநுால் கழகத்தில் இருந்து ஜெகநாதன் மாற்றப்பட்டு, சமூக நலத்துறை பாதுகாப்பு திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டார்.அவரது மாற்றத்துக்கு, பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. 'ஸ்மார்ட்' வகுப்பு மற்றும் ஆய்வகம் தொடர்பான, டெண்டர் பணிகள் நிலுவையில் உள்ள நிலையில், அவரை மாற்றியது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அவருக்கான மாறுதல் உத்தரவு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, பாடநுால் கழகத்தில் பணியாற்றி வந்தார்.இந்நிலையில், அதிகாரி ஜெகநாதன், நேற்று மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 'கஜா' புயல் நிவாரணம் மற்றும் மறுகட்டமைப்பு திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, இலவச சைக்கிள் திட்டத்தில், தரமற்ற சைக்கிள்கள் வந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பான விசாரணையை, ஜெகநாதன் துவக்கிய நிலையில் மாற்றப்பட்டுள்ளார். தரமற்ற சைக்கிள் விவகாரத்தின் விசாரணையை கிடப்பில் போட, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா... என, பள்ளி கல்வி வட்டாரத்தில் சந்தேகம் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment