Sunday, December 9, 2018

விளையாட்டுப் போட்டியில் அசத்திய அரசு ஊழியர்கள்! - மன அழுத்தத்தைப் போக்க புது ஐடியா




தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நெல்லையில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது. அரசு ஊழியர்கள் மன அழுத்தத்துடன் பணியாற்றுவதைத் தடுத்து புத்துணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.



அரசு ஊழியர்கள் விளையாட்டுப் போட்டி
அரசு ஊழியர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் தமிழக அரசின் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அரசு ஊழியர்கள் புத்துணர்வுடன் பணியாற்ற வழி செய்யும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நெல்லையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. பாளையங்கோட்டையில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன.



இந்த விளையாட்டுப் போட்டிகளை நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் தொடங்கி வைத்தார். கால்பந்து, கைப்பந்து, கபடி, தடகளப்போட்டிகள் ஆகியவை நடத்தப்பட்டன. இதில் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் என அனைத்துத் தரப்பினரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு விளையாடினார்கள். அரசு அலுவலகத்தில் ஃபைல்களில் மூழ்கிக் கிடந்த அரசு ஊழியர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பல்வேறு போட்டிகளில் ஆர்வமாகப் பங்கேற்றனர்.



இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை சக ஊழியர்கள் வாழ்த்தி உற்சாகப்படுத்தினார்கள். போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசுகளும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு அலுவலகங்களிலும் பணியாற்றிவரும் 500-க்கும் மேற்பட்டோர் இதில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News