Sunday, December 2, 2018

அரசு பொறியியல் கல்லூரியை எதிர்பார்க்கும் மாணவர்கள்



திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி வட்டங்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் அமைந்துள்ள நிலையில், அப்பகுதியில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடம் வலுத்து வருகிறது.



பொன்னேரியில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் வசதி வாய்ப்புள்ள மாணவர்களே படிக்கும் நிலை உள்ளது. பொன்னேரி, கும்மிடிப்பூண்டி வட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மீஞ்சூர், ஆரணி, கும்மிடிப்பூண்டி, பாடியநல்லூர், ஆரம்பாக்கம், அத்திப்பட்டு, சோழவரம், கவரப்பேட்டை, நந்தியம்பாக்கம், பழவேற்காடு திருப்பாலைவனம், தச்சூர், பஞ்செட்டி உள்பட 50-க்கும் மேற்பட்ட நகரங்கள் அமைந்துள்ளன.

இந்த நகரப் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளன. இந்நிலையில், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி வட்டங்களில் இதுவரை அரசு பொறியியல் கல்லூரி ஏதும் தொடங்கப்படவில்லை.



இப்பகுதியில் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து பயில விரும்பும் மாணவர்கள் தனியார் பொறியியல் கல்லூரிகளையே நாட வேண்டிய நிலை உள்ளது.

மேலும் இப்பகுதியில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தினரே அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் நாள்தோறும் அப்பகுதியில் விவசாயக் கூலி, கட்டுமானப் பணி மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் வேலைக்குச் சென்று தங்களின் வாழ்வாதாரத்தை நிலை நிறுத்திக் கொள்ளும் நிலையில் உள்ளனர்.
இதன் காரணமாக இப்பகுதியில் வசிக்கும் ஏழை, எளியோரின் பிள்ளைகள் பள்ளிப் படிப்பை முடித்த பின்பு, உயர்கல்வி பயிலுவதற்கு அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அதிக அளவு கட்டணம் செலுத்தி படிக்க முடியாத நிலை உள்ளது. 



இதனால் இப்பகுதியில் வசிக்கும் எழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் குறைந்த ஊதியத்துக்கு, கிடைத்த வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது பொன்னேரியில் உலகநாத நாராயணசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது.

அங்கு பழவேற்காடு, செங்குன்றம், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, மெதூர், அனுப்பம்பட்டு, அத்திப்பட்டு, எண்ணூர், மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 64 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கல்லூரியில் 10 ஏக்கர் பரப்பளவில் ஒரு சில இடங்களில் வகுப்பு கட்டடங்கள், விளையாட்டு மைதானம் அமைந்துள்ளன. மீதமுள்ள 50 ஏக்கர் நிலம் முள்புதர்கள் மண்டி அவை வீணாகக் கிடந்தது. தற்போது அங்கு மீன்வளப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு, அதில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.



பொன்னேரி, கும்மிடிப்பூண்டி வட்டங்களில் வசிக்கும் ஏழை, எளிய மாணவர்களின் நலன் கருதி, பொன்னேரியில் உள்ள உலக நாத நாராயணசாமி அரசு கல்லூரிக்குச் சொந்தமான இடத்தில், அரசு பொறியியல் கல்லூரி ஒன்றினை அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே இப்பகுதியில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்பார்ப்பாகும்.

இப்பகுதியில் அரசு பொறியியல் கல்லூரி அமையும் நிலையில், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர், ஆரணி, பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் ஏழை மாணவர்களின் பொறியியல் கல்விக் கனவு நிறைவேறும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News