Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, December 16, 2018

அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்ப படுமா?

தமிழகத்தின் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல்காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.





தமிழகத்தில் மாநகராட்சி நகராட்சி, அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 7,728 பள்ளிகள்உள்ளன.6 ஆயிரம் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், உயர்நிலைப் பள்ளிகளில் 17 லட்சத்து 19 ஆயிரத்து 322 மாணவர்களும், மேல்நிலைப் பள்ளிகளில் 68 லட்சத்து 12 ஆயிரத்து 953 மாணவர்களும், நடுநிலைப் பள்ளிகளில் 8 லட்சத்து 95 ஆயிரத்து 29 மாணவர்களும், ஆரம்ப பள்ளிகளில்29 லட்சத்து 10ஆயிரத்து 351 மாணவர்கள் தொடக்கப்பள்ளி, அரசு நிதி உதவிப்பள்ளி, தனியார் பள்ளிகள் என மொத்தம் 1 கோடியே 31 லட்சத்து 85 ஆயிரத்து 526 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 

தமிழகத்தில் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக 10, 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் நல்ல முறையில் கல்வி கற்று உயர்கல்வி கற்கவும், போட்டித் தேர்வுகளில் சிறந்து விளங்கவும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. அதற்கேற்ப பாடத்திட்டங்கள் திருத்தியமைக்கப்பட்டு புதிய பாடநூல்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு பருவத் தேர்வுக்கும் தனித்தனி அலகுகளாக பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு எளிதாக கல்வியை கற்பிக்கும் வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.





பெற்றோர்களின் தனியார் பள்ளி மோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அதிநவீன கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், கல்வி கற்கும் மாணவர்களுக்கான பாடங்களைதிரைவடிவில் செயல்முறை விளக்கத்துடன் பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும், 1 முதல் 12ம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் படிக்கும் வசதி, அங்கன்வாடி மையங்கள் நர்சரி பள்ளிகளாக தரம் உயர்த்துவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடம்பிடித்துள்ள மாநகராட்சி பள்ளிகளில் வகுப்பறைகளை டிஜிட்டல் வகுப்பறைகளாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்ற அரசின் முடிவு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், அரசு பள்ளிகளுக்கான கட்டமைப்பு வசதிகளில் இன்னும் குறைபாடுகள் இருப்பதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழகம் முழுவதும் 3,688 அரசு உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் உள்ளிட்ட 3000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் பள்ளி அலுவலகம் தொடர்பான பணிகள் செய்து முடிப்பதில் சுணக்கம் ஏற்படுகிறது. பள்ளி வளாகத்தின் தூய்மை, மாணவர் வருகைப்பதிவேடு, வகுப்பறைகள் பராமரித்தல், அரசின் உத்தரவுகள் தொடர்பான சுற்றறிக்கைகளை வகுப்புவாரியாக கொண்டு செல்லுதல் உட்பட 14 வகையான பணிகள் பாதிக்கப்படுகிறது.

காலை பள்ளி தொடங்கும் நேரம், இறை வணக்கம், பாடவாரியான வகுப்புகளுக்கு நேரம் ஒதுக்கீடு செய்வது, உணவு இடைவேளை, பள்ளி முடியும் நேரம் போன்ற காலநேரங்களில் மணி அடிப்பதற்கும் பணியாளர்கள் இல்லை. இதனால் தலைமை ஆசிரியர்களும், மாணவர்களும் அனைத்து பணிகளை செய்ய வேண்டிய அவல நிலை தொடர்கிறது. அதேபோல், பள்ளிகளுக்கான பகல், இரவு காவலுக்கான பணியாளர்கள் இல்லாததால் யாரும், எப்போது வேண்டுமானாலும் பள்ளிக்குள் நுழையும்நிலையில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.

இதனால் வெளிநபர்கள் நடமாட்டம் காணப்படுவதோடு மாணவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. அதேபோல் இரவுக் காவலர்கள் இல்லாத பள்ளிகளில் இரவு நேரங்களில் அத்துமீறி சுவர் ஏறி குதிக்கும் மர்ம நபர்கள் கல்விக்கூடத்தை இலவச மதுகுடிக்கும் கேளிக்கை விடுதியாக மாற்றி வருகின்றனர். மதுபோதையில் இறைச்சிக்கழிவுகளை வகுப்பறைகளில் வீசுவது, காகிதக் குப்பைகளை தீயிட்டு எரிப்பது போன்ற அத்துமீறல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும், தலைமை ஆசிரியர் அறையின் பூட்டை உடைத்துஒலிப்பெருக்கி சாதனம், கேடயம், இரும்பு பெட்டகத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பணம், சத்துணவு கூடத்தில் சேமித்து வைக்கப்படும் உணவுப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சம்பவங்களும் நடந்தேறுகிறது.





இதன் மூலம் மாணவர்கள் மற்றும் பள்ளிகளின் உடமைகளுக்கும் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, மாநிலம் முழுவதும் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும், மாணவ, மாணவிகளும் எதிர்பார்க்கின்றனர்.

பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்த திட்டமில்லைஅரசு பள்ளிகளில் சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும், பள்ளிகளில் இருபாலருக்கும் தேவையான கழிப்பறைகள் அமைக்கவும் உரிய ஆய்வு செய்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான அரசு பள்ளிகளில் இன்றுவரை போர்வெல் கிணற்றில் உள்ள தண்ணீரையே மாணவர்கள் பயன்படுத்த வேண்டிய நிலை தொடர்கிறது. அதேபோல், கழிப்பறைகளை தூய்மையாக பராமரிப்பதற்கு போதியளவில் பணியாளர்கள் இல்லாததால் தொற்றுநோய் கூடாரமாகவே அரசு பள்ளி கழிப்பறைகள் காட்சி அளிக்கிறது.





ஒருசில பள்ளிகளில் கழிப்பறைகள் பாழடைந்த நிலையில் உள்ளது. அதனை சீரமைக்கும் முயற்சிகள் இல்லாததால் திறந்தவெளி மைதானம் கழிப்பிடமாக மாறியுள்ளது. மொத்தத்தில் அரசு பள்ளிகள் கல்வித் தரத்தில் சற்று முன்னேறினாலும், சுகாதாரம், பள்ளிகள் சீராக இயங்குவதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News