Wednesday, December 12, 2018

உள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையம் விளக்கம்!





உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியாததற்குத் தமிழக அரசு கொண்டுவந்த அவசரச் சட்டம்தான் காரணம் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கடந்த ஆண்டு (2017) நவம்பர் 17ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை அமல்படுத்தாத மாநிலத் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேற்று (டிசம்பர் 11) மீண்டும் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.



அப்போது, மாநிலத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நரசிம்மா, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாததற்கு, வார்டு மறுவரையறை செய்வதற்காக ஆணையம் அமைத்து தமிழக அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம்தான் காரணம். உயர் நீதிமன்றத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு முதல்நாள் இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதால்தான், அதைப் பின்பற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்



இதனையடுத்து வழக்கின் விசாரணையை வரும் 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அன்று மாநிலத் தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையத்தின் செயலாளர் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News