Sunday, December 2, 2018

‘பள்ளிக்கூடங்களுக்கு மாணவிகள் பூவைத்துக்கொண்டு வர தடையில்லை’ அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விழாவில் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.



முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அடுத்த மாதத்துக்குள், பிளஸ்-2 படிக்கும் மற்றும் பிளஸ்-2 படித்து முடித்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட உள்ளது. வரும் கல்வியாண்டு முதல் பள்ளி திறந்த உடனேயே இலவச பாட புத்தகங்கள் வழங்குவது போல, விலையில்லா சைக்கிளும், மடிக்கணினியும் வழங்கப்படும்.

671 பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் செலவில் அறிவியல் ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்களின் எதிர்கால கல்வி சிறப்பாக அமையும். அடுத்த மாதம் சிறப்பு ஆசிரியர்கள் புதியதாக நியமிக்கப்பட உள்ளார்கள்.



நீட் தேர்வுக்கு இந்த ஆண்டு 26 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கஜா புயல் காரணமாக விண்ணப்பிக்க மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற உள்ள தேசிய திறன் பயிற்சி வரும் 15-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆண்டுகளாக பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு 3,242 தேர்வு மையங்கள் தான் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 750 தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு தலையில் பூவைத்து வரக் கூடாது. கொலுசு அணிந்து வரக்கூடாது என பள்ளி கல்வித்துறை சார்பில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதா? என்று அமைச்சர் செங்கோட்டையனிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‘பள்ளிக்கூடத்துக்கு மாணவிகள் விலை மதிப்புள்ள நகைகள் அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும். மாணவிகள் கொலுசு அணிந்து வந்தால், கவனச்சிதறல் ஏற்படும். மற்றபடி மாணவிகள் தலையில் பூ வைத்துக் கொண்டு பள்ளிக்கு வருவதில் எந்த தடையும் இல்லை’ என்றார்.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News