புதுக்கோட்டை,டிச.15: கஜா புயல் காரணமாக ஒத்திவைக்கபட்ட எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைக்கான என்.எம்.எம்.எஸ் தேர்வு புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 20 மையங்களில் நடைபெற்றது.
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான என்.எம்.எஸ் தேர்வு டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இந்த தேர்வு டிசம்பர் 15 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற்றது..இந்த தேர்வு அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 6 மையங்களிலும் ,புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 8 மையங்களிலும் இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 6 மையங்களில் என மொத்தம் 20 மையங்களில் நடைபெற்றது.இந்த தேர்வினை 4501 மாணவர்களில் 4417 மாணவர்கள் எழுதினார்கள். 84 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை.. காலை 9.30 மணி முதல் 11 மணி வரையில் மனத்திறன் தேர்வும் 11.30 மணி முதல் 1 மணி வரை படிப்பறிவுத் தேர்வும் நடைபெற்றது..
அரிமளம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,அறந்தாங்கி அரசு ஆண்கள்,பெண்கள் மேல்நிலைப்பள்ளி,ஆவுடையார்கோவில் அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதேபோல புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் என்.செல்லத்துரை, இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் க.குணசேகரன்,புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் கே.அண்ணாமலை ரஞ்சன்,அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலர்(பொ)கு.திராவிடச்செல்வம் ஆகியோரும் தேர்வு மையங்களை பார்வையிட்டனர்.
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை பெறுவதற்கான தேர்வு மாநில அளவில் நடைபெற்றது.இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை கல்வி உதவித்தொகை மத்திய அரசால் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது..
No comments:
Post a Comment