Wednesday, December 5, 2018

சீமைக் கருவேல மரத்தின் இலைகள் மூலம் நமக்கு ஆக்சிஜன் கிடைக்கிறது. விறகு எரிக்க அந்த மரம் பயன்படுகிறது. ஆனாலும் அதை ஏன் அழிக்கிறோம்?




சீமைக் கருவேல மரம் நம் நாட்டைச் சேர்ந்ததல்ல. அதனால்தான் இதைச் ’சீமை’க் கருவேலம் மரம் என்று அழைக்கிறார்கள். ஒரு தாவரம் அந்நிய மண்ணில் வளரும்போது, அங்கே ஏற்கெனவே இருக்கும் தாவரங்களை அழித்து வளரக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. ஏற்கெனவே இருக்கும் தாவரங்கள் மட்டுமின்றி, அவற்றை நம்பியிருக்கும் விலங்குகள், பறவைகள், பூச்சிகள் போன்றவையும் இதனால் பாதிக்கப்படுகின்றன.

அதனால்தான் அந்தந்த மண்ணுக்கு உரிய தாவரங்களை அந்தந்த இடங்களிலேயே வளர்க்க வேண்டும் என்கிறார்கள். 12 மீட்டர் உயரம் வளரக்கூடிய சீமைக் கருவேல மரம், சுமார் 100 மீட்டர் ஆழம்வரை சென்று தனக்குத் தேவையான தண்ணீரை நிலத்திலிருந்து எடுத்துக்கொள்கிறது. இதனால்தான் மழை இல்லாத காலங்களிலும் இந்த மரம் செழிப்பாக வளர்ந்து நிற்கிறது.



இப்படித் தண்ணீரை வேகமாக உறிஞ்சுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது, மற்ற தாவரங்களை வளரவிடாமல் செய்கிறது என்கிறார்கள். சீமைக் கருவேல மரம் வேகமாகப் பெருகிவிடக்கூடியது என்பதாலும் இதை அழிக்க நினைக்கிறார்கள். இந்த மரம் மண் அரிப்பைத் தடுக்கிறது, விறகாகப் பயன்படுகிறது, இதிலிருந்து கரி கிடைக்கிறது. 70 ஆண்டுகளுக்கு மேலாக இங்கே வந்து பரவிவிட்ட இந்த மரங்களை முற்றிலுமாக அழிக்க வேண்டியதில்லை.



இவற்றை நம்பியும் விலங்குகள், பறவைகள், பூச்சிகள், மனிதர்கள் இருக்கின்றனர். இவற்றை அழிப்பதால் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். மனிதனை விட இந்த மண்ணுக்குச் சீமைக் கருவேல மரம் பெரிய தீமையைக் கொடுத்துவிடும் என்று சொல்லமுடியாது.



1 comment:

  1. நிலத்தடி நீர் காணாமல் போக காரணம் இந்த சீமை கருவேலமரம். இதைஅழிப்பதே சிறந்தது

    ReplyDelete

Popular Feed

Recent Story

Featured News