Thursday, December 13, 2018

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்யும்

தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வியாழக்கிழமை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையவுள்ளது. 





இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறவுள்ளதால், தமிழக கடலோரப் பகுதிகளில் வரும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை (டிச.15, 16) ஆகிய நாள்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் புதன்கிழமை கூறியது: தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதிகள் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை நிலவிவந்த ஆழ்ந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தற்போது தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்திய கடல்பகுதியில் நிலவுகிறது. இது வியாழக்கிழமை காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். 





மேலும், இது வெள்ளிக்கிழமை (டிச.14) ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து, தெற்கு ஆந்திரம், வடதமிழகம் நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழக கடலோரம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் வெள்ளிக்கிழமை (டிச.14) மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். தமிழக கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வரும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை (டிச.15, 16) ஆகிய நாள்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும். 

மீனவர்களுக்கு எச்சரிக்கை: தெற்கு வங்கக்கடலில் மத்தியப் பகுதிக்கு வியாழக்கிழமையும் (டிச.13), தென் மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு வெள்ளிக்கிழமையும் (டிச.14), தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை யொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு சனிக்கிழமையும் (டிச.15) மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.





No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News